சைபர்ஜெயா, 27/02/2025 : வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாடுகளின் கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்த புரிதலை மேம்படுத்தி கொள்ளும் முறை, தற்போது அனைத்து கல்விக் கூடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
குறுகிய கால பயணத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் இம்முயற்சி, மாணவர்கள் தங்களின் கல்வி அனுபவத்தைப் பெருக்கிக் கொள்ள பெரிதும் துணைப் புரிகின்றது.
அதில், மலேசியாவில் கல்விச் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 52 மாணவர்கள், இன்று சிலாங்கூர் சிப்பாங்கில் உள்ள சைபர்ஜெயா பல்கலைக்கழகத்திற்கு வருகைப் புரிந்தனர்.
பேச்சு போட்டி, அறிவியல் சார்ந்த கண்டுப்பிடிப்புகள், வினாடி வினா போட்டி என மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்றிருக்கும் மாணவர்களில் சிலரை தேர்வு செய்து, மலேசியாவுக்கு அழைத்து வந்திருப்பதாக, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
4 நாள்கள் பயணமாக அமைந்துவிடாமல், மாணவர்களுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடிய கல்வி சுற்றுலாவாக அமைவதை இம்முயற்சி நோக்கமாக கொண்டிருப்பதாக, அவர் தெரிவித்தார்.
”12-ஆவது படித்து விட்டு, ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தால் போதும், நம்முடைய தரத்திற்குப் படித்துவிட்டு ஒரு வேளையில் சேர்ந்தால் போதும் என்றில்லாமல், பெரிதாக சிந்திக்க வேண்டும். ஏனென்றால், மனிதனின் வாழ்க்கை என்பது இந்த ஒரு தலைமுறையில் நாம் என்ன கொடுக்கின்றோமோ, திருவள்ளுவர் கூறியது போல ஒரு தலைமுறைக்கு நாம் படித்துவிட்டோம் என்றால் நம்மை தொடர்ந்து ஏழு தலைமுறை இதுபோல் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் அல்லவா, அதை விதைக்க வேண்டும் என்றால் இதுபோன்ற திட்டங்கள் மாணவர்களுக்குத் தேவை”, என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இதுவரை ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் மாணவர்களைத் தாங்கள் அழைத்துச் சென்றிருப்பதாக, அவர் மேலும் விவரித்தார்.
இதனிடையே, சொந்த மண்ணை விட்டு முதல் முறையாக வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
”நாங்கள் மலேசியாவிற்கு வந்ததற்குப் பிறகு, இங்குள்ள ஒரு தமிழ்ப்பள்ளிக்குச் சென்றிருந்தோம். அங்கு, தமிழ்நாட்டை விட மிகவும் அழகாக தமிழ் பேசுகின்றனர். தூய்மையான தமிழில் ஆங்கில மொழி கலப்பிடமில்லாமல் பேசுவதை நாங்கள் பார்த்தோம். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது”, என்று 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பிரித்வி ராஜ் காமாட்சி ராஜ் கூறினார்.
”நாங்கள் எங்கள் நாட்டை விட்டு முதல்முறையாக வெளியே வந்திருக்கின்றோம். இங்கு அனைத்தும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. இங்கேயும் தமிழர்கள் இருக்கின்றனர். எங்களை விட தூயத் தமிழில் பேசுகின்றனர். இந்த நாட்டிலிருந்து எங்கள் நாட்டிற்கு நான் ஒரு பழக்கத்தை மட்டும் கொண்டு செல்ல விரும்புகிறோன். வீட்டையும் சாலைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தை நான் கொண்டு செல்ல நினைக்கின்றேன்”, என்று ஆவுடையார்புரம், அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சந்தியா செல்வராஜ் தெரிவித்தார்.
”இங்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால் சாலையில் சமிக்ஞை விளக்குகளைப் பின்பற்றுவது மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது தலையில் கவசம் அணிவது. அதை விட முக்கியமானது, சாலைகளில் குப்பைகளைப் போடுவதைத் தவிர்த்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளில் போடும் பழக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. என்னுடைய நாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய பழக்கமாக நான் அதை பார்க்கின்றேன்”, என்றார் டி. வாடிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த கீர்த்திகேஷ் ராஜன்.
தமிழ்நாடு அரசாங்கத்தின் ஏற்பாட்டில், கடந்த 24-ஆம் தேதி மலேசியாவிற்கு வந்த அவர்கள் அனைவரும், 4 நாள்கள் பயணத்திற்குப் பிறகு, நாளை மீண்டும் தங்களின் தாயகத்திற்குத் திரும்பவுள்ளனர்.
Source : Bernama
#TNStudentsVisitsMalaysia
#CyberjayaUniversity
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.