குவாந்தான், 27/02/2025 : கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி, உணவு விற்பனை செய்யும் பெண் ஒருவரை கொலை செய்ததாக, ஆடவர் ஒருவர் இன்று குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், குற்றம் சுமத்தப்பட்ட 53 வயதான சல்சுல் கமார் அப்துல் கானியிடம் இருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இரவு மணி 7.30-இல் இருந்து 8.30-க்குள், ஜாலான் பாடாங் லலாங், சுங்கை குவாந்தான் முனையப் பகுதியில் இறந்து கிடந்த நோர்ஷமிரா சைனாலின் மரணத்திற்குக் காரணம் என்று அவ்வாடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
அதோடு, மரணத் தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில், 12-க்கும் குறையாத பிரம்படிகளை விதிக்கவும் அச்சட்டம் வகைச் செய்கிறது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட் தெங்கு எலியனா துவான் கமாருசமான் ஒத்திவைத்தார்.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அதிகாலை மணி 5.30 அளவில் திரெங்கானு, கோலா திரெங்கானு, வகாவ் தெம்பூசு கோங் படாக் வீடமைப்பு பகுதியில் அவ்வாடவரை போலீஸ் கைது செய்தது.
உயிரிழந்த உணவு வியாபாரி, 37 வயதான நோர்ஷமிரா சைனாலின் உடலில் குற்றவியல் அம்சங்கள் இருந்ததாக, இதற்கு முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
Source : Bernama
#Kuantan
#PDRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews