அடிப்படைக் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படுவது அவசியமானது

அடிப்படைக் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படுவது அவசியமானது

கோலாலம்பூர், 21/02/2025 : ஒரு குழந்தை முதலில் அறிவது தாய்ப்பாலின் சுவை என்றால், அக்குழந்தை அடுத்தபடியாக உணர்வது தாய்மொழியின் மகத்துவமே.

தாய்ப்பாலைப் போன்று தாய்மொழியும் உயிர்ப்பு மிகுந்தது என்பதை உணர்த்தவே அதற்கு அத்துணை முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

ஒருவர் பேசும் மொழியிலே கல்வி கற்றால், அவரின் சிந்தனைத் திறன் வளரும் என்ற ஆய்வின் அடிப்படையில், அடிப்படைக் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்பட்டால் அறிவார்ந்த சமூகத்தை நிச்சயம் உருவாக்க முடியும் என்கிறார் மாஹ்முட் இடைநிலைப்பள்ளியின் தமிழாசிரியர் சரவணன் இராமச்சந்திரன்.

தாய் தமிழை வளர்ப்பதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதும், தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதுமே அதற்கு முன்னோடியாகும்.

இந்நிலையில் கடந்த ஈராண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு தமிழ்பள்ளியில் முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இந்தியர்களின் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது என்று அதற்கு சில காரணங்களை முன்வைத்தாலும், ஆண்டுதோறும் மலாய், சீனப் பள்ளிகளில் முதலாம் ஆண்டில் பதிவு செய்யும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் எவ்வாறு ஏறுமுகமாகவே உள்ளது என்று ஆசிரியர் சரவணன் கேள்வி எழுப்பினார்.

”நாட்டில் தமிழ்ப்பள்ளிகளை நிலைநிறுத்துவதென்பது தமிழ் மொழியை நிலைத்திருக்க வைப்பதற்கு ஓர் ஆதாரமாக அமைகிறது என்பதை இந்த உலக தாய்மொழி தினத்தில் நாம் மறந்துவிடக்கூடாது. அதுமட்டுமின்றி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதன் வழியும் தமிழை நிலைப்பெற செய்யும் என்பதை நாம் மறக்கக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்மொழியை நிலைபெறச் செய்யவும் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில, அம்மொழி பரந்து விரிந்து வளரவும் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.

”வீட்டில் தமிழ் பேச தொடங்குவோம். வீட்டில் தமிழ் இருந்தால் நாட்டில் தமிழ் தழைத்தோங்கும். ஆக தமிழை உதட்டிலும் உள்ளத்திலும் வைப்போம். பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம். போகின்ற துறை தோறும் தமிழை அழைத்து செல்வோம்,” என்றார் அவர்.

ஏனெனில்,  தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, மாறாக அதன் தொடர்ச்சியிலே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எத்தனை மொழிகளில் கற்றுத் தெரிந்தாலும், ஒரு மனிதனுக்கு தாய்மொழியே முதல் அடையாளத்தைக் கொடுக்கும்.

எனவே, தாய்மை உணர்வோடு அம்மொழியைக் கையாளப் பழகிக் கொண்டால், அடுத்த தலைமுறையினரிடமும் அதை சுலபமாக கொண்டுச் சேர்க்க முடியும் என்றும் சரவணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பெர்னாமா செய்திகளிடம் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Source : Bernama

#WorldMotherTongueDay
#Tamil
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.