கோலாலம்பூர், 21/02/2025 : நேற்று கோலாலம்பூர், ஜாலான் பெட்டாலிங் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 20 கடைகளில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு KPDN மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுமார் மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போலி என்று சந்தேகிக்கப்படும் 6,500 பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், DBKL, மலேசியக் குடிநுழைத்துறை JIM, அரச மலேசிய போலீஸ் படை, PDRM ஆகியவை இணைந்து, மாலை மணி 3.30-க்கு மேற்கொள்ளப்பட்ட Op Putra நடவடிக்கையில், அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, கோலாலம்பூர் KPDN துணை இயக்குநர் நூருல் ஷாரினா முஹமட் அனுவார் தெரிவித்தார்.
கைப்பைகள், இடைவார்கள், பணப்பைகள், செருப்புகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் தொப்பிகள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் 50 முதல் 450 ரிங்கிட் வரை குறைந்த விலையில் விற்கப்படுவதாக Nurul Syarina Md Anuar கூறினார்.
”அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி வெளியிட்ட அறிக்கையில், உலகின் முன்னணி போலிப் பொருட்கள் விற்பனையில், 2023-ஆம் ஆண்டு முதல் ஜாலான் பெட்டாலிங் முதல் நிலை வளாகமாக இருப்பதாக மீண்டும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, நாட்டின் முதலீடுகளை, குறிப்பாக உலகெங்கிலும் உள்ள வணிக முத்திரை உரிமையாளர்களை பாதிக்கும் என்பதால், ஜாலான் பெட்டாலிங்கின் பெயரை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
மேலும், தமக்குக் கிடைத்த தரவுகளை மதிப்பாய்வு செய்ததில் சம்பந்தப்பட்ட வளாகங்கள் ஒரே கூட்டாக செயல்பட வாய்ப்புள்ளது என்றும், அது வெளிநாட்டினரால் நடத்தப்படுவதாகவும் சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களை, குறிப்பிட்ட கடைகளில் பதுக்கி வைத்து வியாபாரிகளுக்கு விநியோகம் செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.
2019-ஆம் ஆண்டு வணிக முத்திரைச் சட்டத்தில் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், நிறுவனத்திற்கான ஒவ்வொரு போலி பொருட்களுக்கும் 15,000 ரிங்கிட் வரை அபராதமும், அதில் சம்பந்தப்பட்டிருக்கும் நபர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும்.
Source : Bernama
#KPDN
#DBKL
#PDRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.