கோலாலம்பூர், 19/02/2025 : ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்ற மலேசிய இந்திய குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழ்ப்பள்ளியில் படிப்பதற்குப் பதியும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது வியப்பளிக்கவில்லை. சீனப்பள்ளிக்கும் இதே நிலைமைதான். பிறப்பு விகித வீழ்ச்சியால் அங்கும் மாணவர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாமல் தேசியப் பள்ளிக்கும், சீனப் பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும், பன்னாட்டுப் பள்ளிக்கும் செல்லும் இந்திய மாணவர்களை மடைமாற்றித் தமிழ்ப்பள்ளிப் பக்கம் திசை திருப்பும் உத்தியே இனித் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
அதற்கு முன்னர் ஏன் தமிழ்ப்பள்ளியை நம்மவர்களில் ஒரு சில தரப்பினர் தவிர்க்கின்றனர் என்பதற்கான காரணக் காரியங்களை ஆய்ந்து மாற்று வழியைக் காணுதல் வேண்டும்.
‘தமிழ்ப்பள்ளியே என் தேர்வு’ எனும் பரப்புரை முழக்கம் ஏற்கனவே தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பிவரும் பெற்றோர்க்கு வேண்டுமானால் சிலிர்ப்பை ஏற்படுத்தலாம். அனுப்பாதவரிடையே என்ன பாதிப்பை/விளைவை ஏற்படுத்தியது என்பதை அறியாமல் பரப்புரையைத் தொடர்ந்து செய்து தற்கிளர்ச்சி கொள்வது பயனளிக்காது.
தமிழ்ப்பள்ளிகள் பற்றியும் தமிழ்க்கல்வி பற்றியும் எத்தகைய பிறழ் அனுமானங்களையும் தவறான கருத்துக்களையும் தமிழ்ப்பள்ளியைத் தவிர்ப்போர் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிந்து திட்டங்களை வகுக்க வேண்டும்.
அண்மையில் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளையை அனுப்பிய பெற்றோர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ஜெஞ்சாரோம் சிற்றூரில் கிடைத்தது.
” தமிழ்ப் பள்ளியில் பதிந்த பின்னர் எனக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. என் பிள்ளைக்கு மலாய் மொழியில் சரியாக பேசவும் வாசிக்கவும் முடியவில்லை”.
இன்னொருவரும் இதே கருத்தை ஒப்புவித்தார்.
” தமிழ்ப்பள்ளியில் படிக்கும் என் பேரக்குழந்தைக்கு மலாய் மொழியில் பேசவும் வாசிக்கவும் இயலவில்லை. மலாய் பள்ளியில் பதிந்து விட என் மகன் முடிவு செய்து விட்டான். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்பதாக இல்லை. ‘ அம்மா இது என் பிள்ளை. நானே முடிவு செய்து கொள்கிறேன்’ என்றான்”.
தமிழ்ப்பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க அனுப்பும் பெற்றோர் தாய்மொழி வல்லமையோடு ஆங்கிலம் மலாய் மொழிகளில் தங்கள் பிள்ளைகள் ஆற்றல் பெறுவதைக் காண விரும்புகிறார்கள்.
தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாத பெற்றோர் தாய்மொழியை விடவும் அன்றாட வாழ்வியலுக்கு உதவப்போகும் மொழிகளில் புலமை பெறுவதை விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் வைக்கின்றனர்.
இப்படி எத்தனையோ காரணங்களைக் கண்டறிந்தாலும் சுருக்கமாகச் சொன்னால்
‘ தரமான கல்வி, தரமான ஆசிரியர், தரமான வசதி கொண்ட பள்ளி, தரமான மாணவர்’ என்ற இந்த நான்கு பெருங்காரணிகளுக்குள் எல்லாவற்றையும் அடக்கிவிடலாம்.
இந்த நான்கினுக்குள்ளே தரமுயர்த்தும் பணியில் இப்போதே பள்ளிகள் ஈடுபட்டால் நாளடைவில் ‘ தரம்’ என்றால் தமிழ்ப்பள்ளி என்ற அடையாளம் உண்டாகும்.
மொழிக்கல்வி
– ஆங்கிலத்திலும் மலாயிலும் சரளமாகவும் சில வேளைகளில் தேசியப் பள்ளி/ தனியார் பள்ளி/ பன்னாட்டுப் பள்ளியையும் விஞ்சும் அளவுக்கு மொழி ஆளுகையும் இருந்தால் தமிழ்ப்பள்ளிப் பக்கம் பாய்ந்து வருவர்
அறிவியல் & கணிதக் கல்வி
– உலகத்தரம் வாய்ந்த கற்றல் கற்பித்தலுடன் பன்னாட்டு அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுதலும் தமிழ்ப்பள்ளிகள் மீது ஈர்ப்பை அதிகரிக்கும்.
ஒழுங்கு நேர்த்தி
– ஒழுங்கு/ ஒழுக்கத்திலும் பண்பிலும் நேர்த்தியான வேலையிலும் தன்னூக்கத்திலும் விடாமுயற்சியிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தலைசிறந்தவர்கள் எனும் அடையாளமும் வெளிப்பட்டால் தமிழ்ப்பள்ளிப் பக்கம் ஈர்ப்பை அது அதிகரிக்கும்
உலகமயமாக்கல், நகரமயமாக்கல் , தாய்மொழியின் தேவை குறித்து மாறிவரும் மனப்போக்கு இம்மூன்றினால் பாதிப்படைந்துள்ள தமிழ்க்கல்வி, தரம் பற்றிய கவல் இன்றி வெறும் மொழிப்பற்று ஒன்றினால் மட்டுமே நிலைத்தன்மை பெறும் என்பது சவால் மிக்க இன்றைய உலகில் சாத்தியப்படாது.
கட்டுரை : முனைவர் குமரன் வேலு
DrKumaranvelu Ramasamy Facebook
புள்ளிவிவரம் : Persatuan Guru Besar Sekolah Tamil Malaysia
#SJKT
#AdmissionDecline
#DrKumaranveluRamasamy
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.