கோலாலம்பூர், 17/02/2025 : பணி இடங்களில் ஏற்படும் எதிர்பாரா விபத்துகளால், அதன் முதலாளிகள் பல்வேறு நிதி நெருக்கடிக்களை எதிர்நோக்குகின்றனர்.
அவ்வாறு ஏற்படும் நிதி சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்கில் உரிமம் பெற்ற வியாபாரிகளும் வர்த்தகர்களும், SKSPS எனப்படும் சுயத்தொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் படி, சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ வலியுறுத்தியிருந்தது.
அது குறித்த கூடுதல் விளக்கத்தையும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் அரசியலமைப்பு, மனித உரிமைகள் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேசன் ஷண்முகம் இன்றைய நமது சட்டம் தெளிவோம் அங்கத்தில் பகிர்ந்து கொள்கிறார்.
சுயத் தொழிலில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 2017-ஆம் ஆண்டு சுயத்தொழில் சமூகப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் SKSPS திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வர்த்தக துறையைச் சேர்ந்த 53 ஆயிரத்து 901 பேர் SKSPS-இல் பதிந்து கொண்டுள்ள வேளையில், 189 பேர் அதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
உரிமம் பெற்றுள்ள வியாபாரிகளும் வர்த்தகர்களும் தங்களின் பணி இடத்தில் எதிர்கொள்ளும் விபத்துகள் மூலம் பாதிப்படையாமல் இருப்பதை இத்திட்டம் உறுதிச் செய்யும் என்று வழக்கறிஞர் கார்த்திகேசன் ஷண்முகம் கூறினார்.
”சுயத் தொழில் சமூகப் பாதுகாப்பு திட்டம். இந்த சுயத் தொழிலில் ஈடுபடும் தரப்பினரின் பாதுகாப்பு உறுதி செய்ய, 2017-ஆம் ஆண்டு சுயத் தொழில் சமூக பாதுகாப்பு சட்டத்தின், சட்டம் 789-இன் கீழ் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் என்பது சுயத்தொழிலில் காப்புறுதி பெற்றுள்ள ஒருவருக்கு, தொழில் சார்ந்த பயணத்தின் போது ஏற்படும் விபத்து மற்றும் தொழிலில் நிமித்தம் உண்டாகும், காயம் அல்லது நோயைக் குறிப்பிடுகின்றது”, என்று அவர் கூறினார்.
2017-ஆம் ஆண்டில், தொடக்கக் கட்டமாக பயணிகள் போக்குவரத்து சேவைத் துறைக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர், 2022-ஆம் ஆண்டில் போக்குவரத்து சேவை துறை மற்றும் பொருட்கள் அல்லது உணவுகளை விநியோகிக்கும் துறைக்கும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தற்போது மூன்றாவது கட்டமாக, வர்த்தக துறைக்கும் இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் 20 தொழில்துறைகள் உட்படுத்தப்பட்டிருப்பதாக, வழக்கறிஞர் கார்த்திகேசன் விவரித்தார்.
”பயணிகளுக்கான போக்குவரத்து, பொருள் மற்றும் உணவு போக்குவரத்து, வியாபாரத் துறை, விவசாயம், கால்நடை, வனவியல், மின்வளம், தயாரிப்பு துறை, கட்டுமானம், உணவு அல்லது அங்காடி துறை, இணைய வணிகம், உடல்நல பாதுகாப்பு அல்லது சிகிச்சை, தகவல் தொழில்நுட்பம், தரவு முறைமை, நிபுணத்துவ சேவை, ஆதரவு துறை, கலை, முகவர்கள், வீட்டு சேவை, தங்குமிட சேவை”, அதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்வதன் மூலம் சுயத்தொழில் செய்யும் வியாபாரிகளும் வர்த்தகர்களும் பெறக் கூடிய சலுகைகள் குறித்து அவர் இவ்வாறு விளக்கினார்.
”நிறைய சலுகைகளும் இருக்கின்றது. தற்போது சொக்சோவில் கொடுக்கக் கூடிய சலுகைகள் என்னவென்றால் மருத்துவ சலுகை, வேலை செய்ய முடியவில்லை என்றால் தற்காலிகமாக வழங்கக் கூடிய சலுகைகள், நிரந்தர செயலமைப்பு சலுகை, நிலையான உதவியாளர் செலவுப் பட்டி”, போன்றவைகள் என்று கார்த்திகேசன் கூறினார்.
அதோடு, SKSPS-சின் கீழ் பதிவுச் செய்ய தவறுபவர்களுக்குக் குறைந்தபட்சம் 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.
Source : Bernama
#SKSPS
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews