தஞ்சோங் காராங்கின் 5 தோட்டங்களில் வசித்த மக்களுக்கு சொந்த வீடு

தஞ்சோங் காராங்கின் 5 தோட்டங்களில் வசித்த மக்களுக்கு சொந்த வீடு

தஞ்சோங் காராங், 15/02/2025 :   தஞ்சோங் கராங்கில் உள்ள ஐந்து தோட்டங்களில் வசித்த மக்கள் 27 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, சொந்த வீடுகளைப் பெறவிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

பி.ஆர்.ஆர் எனப்படும் மக்கள் வீடமைப்பு திட்டத்தின் வழி 45 ஆயிரம் ரிங்கிட் விலையில் 750 சதுர அடி பரப்பளவு கொண்ட 245 வீடுகள் விற்கப்படவுள்ளன.

இந்த மக்கள் வீடமைப்பு திட்டம், மேரி தோட்டம், நிகல் கார்ட்னெர் தோட்டம், புக்கிட் தகார் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம் மற்றும் மிஞ்சாக் தோட்டம் ஆகியவற்றில் வசித்த தொழிலாளர்களுக்கு உதவுவதில் மடானி அரசாங்கத்தின் அக்கறையைப் புலப்படுத்தவதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை, கே.பி.கே.டி அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

இருப்பினும், தொழிலாளர்கள் மலிவான விலையில் வீடுகளை வாங்குவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் 5 கோடியே 88 லட்சம் ரிங்கிட் உதவி நிதி வழங்கவுள்ளது.

“பணம் எங்கிருந்து வந்தது? அந்த நேரத்தில் மத்திய அரசின் அமைச்சிடம் போதுமான ஒதுக்கீடு இல்லை. என்னிடம் 2 கோடி ரிங்கிட் மட்டுமே இருந்தது. எனவே நான் பிரதமரைச் சந்தித்து மக்களின் கஷ்டங்கள் குறித்து எனது கவலையைத் தெரிவித்தேன். பின்னர், மிகுந்த அக்கறையுடனும், மக்களுக்கான ஒற்றுமை உணர்வுடனும், பிரதமர் வெறும் 30 வினாடிகளில் 2 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை அங்கீகரித்தார்”, என்று அவர் கூறினார்.

24 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் ஒரு வீட்டின் மதிப்பு மூன்று லட்சம் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“பத்து வருடங்களாக இந்த வீட்டிற்குப் போராடுகின்றோம். பதினைந்து வருடங்களாக உணவு இல்லாமல், நீர் இல்லாமல், பேருந்துகளின் மூலம் சொந்த பணத்தைப் பயன்படுத்தி, இந்த வீட்டிற்காக நாங்கள் மிகவும் பாடுப்பட்டோம். இன்று எங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கின்றது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால், 2027-ஆம் ஆண்டில் தான் இந்த வீட்டிற்கான சாவி கிடைக்கும் என்று கூறியிருக்கின்றனர். நாங்கள் எதிர்பார்ப்போம்”, என்று தோட்டத் தொழிலாளியான வி. பார்வதி கூறினார்.

இந்த குடியிருப்பு பகுதியில் பாலர் பள்ளி, கடைகள், சமூக பண்டபம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு மைதானம் ஆகிய அடிப்படை வசதிகளும் நிறுவப்படும்.

Source : Bernama

#TanjongKarang
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews