கோலாலம்பூர், 13/02/2025 : நாட்டில் எந்தவொரு அமைதி பேரணியைச் செயல்படுத்துவதற்கு உதவும் மற்றும் எளிமைப்படுத்தும் வகையில் 2012ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டம், சட்டம் 736-ஐ திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் அச்சட்டத்தில் பேரணி நடத்தப்படும் இடத்தின் உரிமையாளரின் ஒப்புதலின் அவசியத்தை உள்ளடக்கிய செக்ஷன் 11-ஐ அகற்றப்படவிருப்பதாக அவர் கூறினார்.
அமலாக்கத் தரப்பினர் பாதுகாப்பு, கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில், பேரணி நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக ஏற்பாட்டாளர்கள் அரச மலேசிய போலீஸ் படை, PDRM-இடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
“இதன்வழி, பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு பேரணி மீதான விசாரணை உட்பட பல முந்தைய நடவடிக்கைகளும் விசாரணைகளும் நிறுத்தப்படும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதே போல், சில நாட்களுக்கு முன்னதாக சொஸ்மா தொடர்பான உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது,” என்றார் அவர்.
இன்று மக்களவையில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனுமதியைப் பெறாமல் மக்கள் அமைதியாக ஒன்றுக்கூடுவதை எளிமைப்படுத்தும் வகையில் சட்டம் 736-ஐ திருத்தம் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளதா என்று கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் எழுப்பிய கேள்விக்கு அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews