பிபிஆர் வீடமைப்பு வசதிகளை சரிசெய்ய 18 கோடியே 50 லட்சம் ரிங்கிட் அரசாங்கம் ஒதுக்கீடு

பிபிஆர் வீடமைப்பு வசதிகளை சரிசெய்ய 18 கோடியே 50 லட்சம் ரிங்கிட் அரசாங்கம் ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, 13/02/2025 : இவ்வாண்டில் நாடு முழுவதும் உள்ள 358, பிபிஆர் எனும் மக்கள் வீடமைப்புத் திட்டங்களின் வசதிகளை சரிசெய்வதற்கு அரசாங்கம் 18 கோடியே 50 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

பிபிஆர்  குடியிருப்பாளர்கள், குறிப்பாக நகர்ப்புறங்களில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முன்னுரிமை அளிக்கும் மடானி அரசாங்கத்தின் முயற்சி இதுவாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“1995-ஆம் ஆண்டு முதல் நாம் மேம்பாடுகளுக்கு செலவழித்தோம். முதல் முறை, இவ்வாண்டு மட்டும் மின்தூக்கி, சாயம் பூசுதல், கூரையைச் சரிசெய்தல் போன்றவற்றுக்கும், பிபிஆர்-இன் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 18 கோடியே 50 லட்சம் ரிங்கிட் செலவாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் 10 கோடி ரிங்கிட் செலவழித்தோம். அதனால் இந்த இரண்டு ஆண்டுகள் 28 கோடியே 50 லட்சம் ரிங்கிட் செலவானது.  ஆனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் மின்தூக்கியை சரிசெய்வது வீண் செலவாகாது,” என்றார் அவர்.

இன்று, சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா, லெம்பா சுபாங் சத்துவில் உள்ள பிபிஆர்  குடியிருப்பு பகுதியில், நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது அவர் அவ்வாறு கூறினார்.

லெம்பா சுபாங் சத்து பிபிஆர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி சேதமடையும் மின்தூக்கி வசதிகள் உட்பட மேலும் சில சீரமைப்பு பணிகளுக்கு 12 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டையும்  பிரதமர் அறிவித்தார்.

அதோடு, ரமலான் மாதத்தை முன்னிட்டு அப்பகுதியில் மக்களின் வசதியை கவனத்தில் கொண்டு மின்தூக்கி பழுதுபார்க்கும் திட்டத்தை விரைந்து மேற்கொள்ளவும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சுக்கு அவர் நினைவூட்டினார்.

Source : Bernama

#PPRHousingScheme
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews