ஷா ஆலம், 12/02/2025 : இம்முறை கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, விரைவு பேருந்து சேவைக்கான கட்டணம் உயர்வு கண்டால், அதைத் தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம், ஆபாட் (APAD) மூலம் அரசாங்கம் கண்காணிக்கும்.
பண்டிகைக் காலத்தில் 10 விழுக்காடு கூடுதல் கட்டணம் விதிக்க விரைவு பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும்,
மிக அதிகமாகவும் நியாயமற்றதாகவும் இருக்கும் எந்தவொரு கட்டண உயர்வுகளுக்கு எதிராக ஆபாட் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
”ஆனால் விரைவு பேருந்துகள் தொடர்பான கட்டணங்களில் சிக்கல்கள் உள்ளன. எனவே நாங்கள் இன்னும் ஆபாட் (APAD) மூலம் கண்காணிக்கிறோம். நியாயமற்ற அல்லது மிக அதிக விலை உயர்வு இருந்தால் ஆபாட் கண்காணிக்கும். மேலும் நாங்கள் (போக்குவரத்து அமைச்சு) ஆபாட் மூலம் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு, விரைவு பேருந்து சேவைக்கான கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து, லோக் அவ்வாறு கருத்துரைத்தார்.
கூடுதல் பேருந்து சேவை மற்றும் பேருந்து வாடகைக்கான கட்டணம் உட்படப் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலத்தில் விரைவுப் பேருந்து சேவையில், 10 விழுக்காடு கூடுதல் கட்டணம் அனுமதிக்கப்பட்டதாக, கடந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி லோக் கூறியிருந்தார்.
முன்னதாக, இன்று சிலாங்கூர் ஷா ஆலமில் நடைபெற்ற தளவாட மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews