பக்த வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் பத்துமலை திருத்தலம்

பக்த வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் பத்துமலை திருத்தலம்

பத்துமலை, 11 பிப்ரவரி (பெர்னாமா) —   குன்றுகள் தோறும் நின்று அருள்பாளிக்கும் தமிழ்கடவுளாம் முருகப் பெருமானை பக்தர்கள் மனமுருகி வேண்டி நிற்கும் தைப்பூசத் திருநாள்.

வரம் தரும் கந்தக் குமரனைப் போற்றி, நாட்டின் பல திருத்தலங்களில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிலாங்கூர், பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானத்தின் காலை நேர நிலவரங்களுடன் இன்றைய பெர்னாமா செய்திகள் தொடக்கம் காண்கின்றன.

இன்று காலை தொடங்கியே பக்தர்கள் பால்குடங்களையும், காவடிகளையும் ஏந்தியவாறு தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்கி விட்டனர்.

அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குழுமியதால் குகை கோவிலுக்குச் செல்லும் பாதை கடும் நெரிசலுக்குள்ளானது.

முதல் படிவரிசையில் பால்குடங்கள், இரண்டாவது படிவரிசையில் காவடிகள், அவசர தேவைகளுக்கு மூன்றாம் படி வரிசை மற்றும் மேலிருந்து கீழே இறங்குவதற்கு நான்காம் படி வரிசை என பிரித்து ஆலய நிர்வாகம் முறையான வழிக்காட்டுதலை வைத்திருந்தாலும், அதனை பின்பற்றப்படாத சூழ்நிலை உருவானது.

இதனால், பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில், கால தாமதமும் ஏற்பட தொடங்கியது.

இருப்பினும், பொருமை காத்து முருகனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியை சிலர் பகிர்ந்து கொண்டனர்.

”நாங்கள் எங்களுடைய நேர்த்திக் கடனை இரண்டு மணிக்குத் தொடங்குவோம், ஆனால், இன்று கூட்டம் என்பதால் அதிக நேரமாகிவிட்டது. இல்லையென்றால் ஏழு மணிக்கெல்லாம் முடிந்து விடும். இன்று மக்களின் அலை மோதுகின்றது. அங்கிருந்து இங்கு வருவதற்கு இரண்டு மணி நேரங்களாகி விட்டது”, என்று மறத்தான் துரைசாமி கூறினார்.

”ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் பால்குடங்கள் எடுத்து காணிக்கை செலுத்துவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு பார்த்தோமானால் ஏறக்குறைய ஒரு 4 மணியளவில் ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தோம். இப்பொழுது தான் நாங்கள் இங்கு வந்தடைந்தோம். இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கூட்டம் இதுபோல் அதிகமாக இருப்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது”, என்றார் சுகுமார் மாரியப்பன்.

மேலும், தண்ணீர் பந்தல்கள், உணவு மற்றும் வியாபாரக் கடைகள் வரிசைப் பிடித்திருந்த வேளையில், ஆற்றங்கரையில் இருந்து காவடிகளுடன் பால் குடங்கள் ஏந்திய பக்தர்களும் ஆலயத்தில் குழுமத் தொடங்கினர்.

வழக்கம் போல, குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கான முடிகாணிக்கை செலுத்தும் பணிகளும் நேர்த்தியாக நடைபெற்றது.

இதனிடையே, பத்துமலை தைப்பூசம் இந்துக்களை மட்டுமின்றி பிற இனத்தவர்களையும் குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளையும் அதிகம் கவர்ந்திருப்பதால், அவர்களின் வருகையும் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

”முதல் முறையாக தைப்பூசத்திற்கு வந்துள்ளேன். நன்றாக இருக்கின்றது. வர்ணிப்பதற்கு கடினமாக இருக்கின்றது, மனதிற்கு அமைதியைக் கொடுக்கின்றது. நான் நினைத்ததை விட காவடிகள் பெரிதாக இருக்கின்றது. இதை எப்படி மக்கள் சுமந்துக் கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. சுமத்துச் செல்லும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். முற்றிலும் பிரம்மாண்டமாக இருக்கின்றது”, என்று கூறினார் பல்கேரியாவைச் சேர்ந்த டெலியன்.

”நாங்கள் இங்கு வந்தர்க்கு காரணம் சில அனுபவங்களைக் கற்றுக் கொள்வதற்கு. உடலில் முட்களைக் குத்திக் கொண்டு செல்லும் மக்களை பார்ப்பதற்கு ஈர்ப்பாக இருக்கின்றது. மிகவும் சிறப்பாக இருக்கின்றது. ஏனெனில், நாங்கள் வெளிநாட்டவர்கள் என்பதால்”, என்று  ஸ்பெயினைச் சேர்ந்த ஐரீன் கூறினார்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கீழ் தலத்தில் தேவையான அறிவிப்புகளை ஆலயத் தரப்பு வழங்கி வந்த நிலையில், சமுதாய கடப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இலவச சிகிச்சை முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Souce : Bernama

#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews