கோலாலம்பூர், 10/02/2025 : தைப்பூசம் சமய நெறியுடன் கொண்டாடப்பட்டாலும் மக்கள் பலரின் அலட்சிய போக்கினால் இத்திருவிழாவிற்குப் பிறகு கோவில் வளாகங்கள் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கின்றன.
ஆலய வளாகங்களைச் சுற்றி பல குப்பைத் தொட்டிகள் ஏற்பாடு செய்து வைத்திருந்தாலும் குப்பைகளை அதில் போட வேண்டும் என்ற அடிப்படை விழிப்புணர்வு இல்லாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், ஆலயங்களில் தூய்மை குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ‘CLEAN THAIPUSAM’ தோற்றுநர் விக்னேஸ்வரன் கலியப்பெருமாள் வலியுறுத்துகின்றார்.
சமய நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடும் பொழுது ஆலயங்களின் தூய்மையைப் பராமரிப்பதை அனைவரின் கடமையாக உணர்ந்திருக்க வேண்டும்.
எனினும், மக்களின் அலட்சியப் போக்கினால் தூய்மைக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் கண்ட இடங்களில் குப்பைகள் போடுவதையே அதிகம் விரும்புவதாக விக்னேஸ்வரன் கலியப்பெருமாள் கூறினார்.
“அங்கு மலைபோல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த இடத்தை ஆழ்ந்து பார்க்கையில் தான் அது சூடம் கொளுத்தி தேங்காய் உடைக்கும் இடம் என்பதை அறிந்து கொண்டோம். அக்குப்பைகளை அங்கிருந்து அகற்றும் போதுதான் குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் எனப்படும் அணையாடைகளும் அதில் இருந்ததைக் கண்டோம். பலரின் சிந்தனை இப்படி இருக்கிறது என்பதை நினைக்கையில் கவலையாக இருந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
தைப்பூசத்தின் போது, உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டவரும் கலந்து கொள்ளும் ஒவ்வொரு முருகன் திருத்தலங்களிலும் லட்சக் கணக்கான மக்கள் கூடுகின்றனர்.
உடலும் உள்ளமும் தூய்மையுடன் இறைவன் அருளை வேண்டி செல்லும் இடம் இவ்வாறு தூய்மையின்றி காணப்படுவது தமக்கு மிகவும் வேதனை அளிப்பதாக பெர்னாமா தொலைக்காட்சியின் பார்வை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, குறை சொல்வதை விடுத்து தாமே களத்தில் இறங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கிய ‘CLEAN THAIPUSAM’ எனப்படும் விழிப்புணர்வு பிரச்சாரம் தற்போது இனம், மதம் மற்றும் சமயத்தைக் கடந்து பீடு நடைப் போடுவதை, அவர் இவ்வாறு விளக்கினார்.
“இவ்விவகாரத்தை நாம்தான் சுயமான நினைத்து குழப்பிக் கொள்கிறோம். மக்களின் பொறுப்புணர்வு இதில் எவ்வாறு உள்ளதை என்பதையும் அப்போது உணர முடிந்தது. பினாங்கு மற்றும் பத்துமலையில் சீன சமூகத்தைச் சேர்ந்த அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். அவர்களும் மலாய்க்காரர்களும் கலந்து கொள்கின்றனர். இதன் மூலமாக மத சார்பற்று அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்பது இதற்கு கிடைத்த வெற்றியாகும்,” என்றார் அவர்.
மக்கள் திரளாகக் கூடும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது ஒரு தனிநபரின் கடமையல்ல. மாறாக, ஒவ்வொருவரின் கடமையாகும்.
எனவே, தூய்மையைக் காக்க நம்மால் இயன்றதைச் செய்வோம்.
Souce : Bernama
#CleanThaipusam
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews