மக்கள் வெள்ளம் புடை சூழ வெள்ளி இரத்தில் பவனி வந்தார் முருகப் பெருமான்

மக்கள் வெள்ளம் புடை சூழ வெள்ளி இரத்தில் பவனி வந்தார் முருகப் பெருமான்

கோலாலம்பூர், 10/02/2025 : பக்தி மணம் கமழ தாய்க் கோவிலான கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து நேற்றிரவு மணி 9.15 அளவில் பத்துமலை திருத்தலத்தை நோக்கி வெள்ளி ரதம் பரவசத்தோடு புறப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை அலையெனப் பக்தர்கள் கூடி முருகப் பெருமானைப் போற்றி அரோகரா துதி பாடியவாறு பாதயாத்திரையாக நடந்து சென்றதை பெர்னாமா செய்திகள் பதிவு செய்திருந்தது.

இவ்வாண்டு கோலாலம்பூரிலிருந்து பத்துமலை வரையில் 26 இடங்களில் வெள்ளி இரதம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் திருப்தியான முறையில் அர்ச்சனை செய்து கந்தனை உளமாற வழிபட்டுச் சென்றனர்.

கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு இரதத்தின் புறப்பாடு சற்று வேகமாக இருந்ததால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இரதம் சில இடங்களில் கடந்து சென்றது.

அதோடு, இரத ஊர்வலத்தின் போதே தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் பலர் பால் குடம் மற்றும் சிறிய காவடிகளை ஏந்திய வண்ணமாய் பத்துமலை திருத்தலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

இம்முறை வெள்ளி ரத ஊர்வலத்தில் கலந்து கொண்டு பாதயாத்திரையாக பத்துமலை திருத்தலத்தை சென்றடைவது, மனதிற்கு முழு திருப்தி அளிப்பதாக பக்தர்கள் சிலர் பெர்னாமா செய்திகளிடம் பகிர்ந்து கொண்டனர்.

“முதல் முறையாக வெள்ளி இரதத்துடன் நடக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தூரமாக நடக்க வேண்டும் என்ற அச்சம் இருந்தாலும், முருகனை முழு மனதாக நம்பி நடக்கிறேன். நிச்சயம் நன்மையில் முடியும்,” என்று கெப்போங்கைச் சேர்ந்த ஜெகன் சுந்தரம் தெரிவித்தார்.

“வழக்கத்திற்கு மாறாக இம்முறை கூட்டம் அதிகமாக இருந்தாலும் அனைத்து முன்னேற்பாட்டு வேலைகளையும் ஆலயத் தரப்பினர் நேர்த்தியாக செய்துள்ளனர். மேலும், இங்கு வழங்கப்படும் அன்னதாங்களை தேவைக்கு அதிகமாக எடுத்து வீணாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்,” என்று கிள்ளானைச் சேர்ந்த பரிமளா சுப்பிரமணியம், கெப்போங்கைச் சேர்ந்த உஷாதேவி கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

பத்துமலை முருகன் மீது கொண்ட அலாதி பிரியத்தால், இரண்டாவது ஆண்டாக மலேசியாவிற்கு வந்து வெள்ளி ரதத்துடன் நடந்து நேர்த்திக் கடன் செலுத்துவது மனநிறைவளிப்பதாக கோயபுத்தூரைச் சேர்ந்த சுருளீஸ்வரி கணேசன் தெரிவித்தார்.

பக்தர்களின் பசி, தாகம், களைப்பினைத் தீர்க்க ஜாலான் துன் எச்.எஸ்.லீ தொடங்கி பத்துமலை வரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் மற்றும் அன்னதானப் பந்தல்கள் போடப்பட்டிருந்தன.

பார்க்கும் இடமெல்லாம் பானங்களும் உணவுகளும் வழங்கப்பட்டு வந்தாலும் வந்திருந்த பக்தர்கள் உண்ட பின்னர் பொறுப்புணர்வோடு அவற்றைக் குப்பைத் தொட்டியில் போடுவதாக துப்புரவு பணியாளர் ஈஸ்வரி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதனிடையே, வழிநெடுகச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் அதிகாரிகள், தீயணைப்புப் படையினர், இராணுவத்தினர், கலகத் தடுப்புப் படையினர் ஆகியோருடன் தொண்டூழிய பணியாளர்களும் செவ்வனே தங்களின் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

Souce : Bernama

#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews