லபுவான், 09/02/2025 : லபுவான் திருமுகன் ஆலயத்தின் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா, இராணுவ மற்றும் ஆகாய படைகளின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களின் வருகையுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இத்தீவில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் இந்த ஒரே ஆலய கும்பாபிஷேக விழாவில், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து, தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தரிசனத்தைப் பெற்றனர்.
1960ஆம் ஆண்டுகளில் லபுவானில் உள்ள இந்திய இராணுவ மற்றும் ஆகாயப்படை வீரர்களின் முன்னெடுப்பில், சிறியதாக ஒரு வேல் கொண்டு உருவாக்கப்பட்ட திருமுகன் ஆலயம்…
பின்னர், அவர்களின் பராமரிப்பில் கட்டம் கட்டமாக வளர்ச்சி பெற்று இன்று ராஜகோபுரத்துடன் கம்பீரமாக கும்பாபிஷேகம் கண்டிருக்கிறது.
அம்மண்ணில், இந்திய சமூகத்தினர் சுமார் 250 பேர் வசிக்கும் வேளையில், அன்று அதிகாரிகளாகவும் உறுப்பினர்களாகவும் லபுவான் இராணுவ மற்றும் ஆகாய படைகளில் இருந்தவர்கள் உட்பட,
அப்படைகளில் இன்று தீபகற்பத்தில் பணிபுரிவர்கள் என்று கடல் கடந்து வந்து பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
அதோடு, தைப்பூசத்தை சொந்த மண்ணில் புதிய ஆலயத்தில் கொண்டாடுவது குறித்து சிலர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
“ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் தைப்பூசம் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த முறை கும்பாபிஷேகமும் சேர்ந்து நடத்தப்படுவது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. லபுவானில் வேலை செய்தவர்கள் மற்றும் கல்வி கற்றவர்கள் என்று இங்கிருந்து வெளியே சென்றிருந்த பலர் இன்றைய இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று லாபுவானைச் சேர்ந்த சீதா வீரசிங்கம் தெரிவித்தார்.
“இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டது எங்களுக்கு மிகப் பெரிய ஆசிராக கருதுகிறோம். இந்த பாக்கியத்தைக் காண சிறப்பு விமானத்திலிருந்து நாங்கள் வந்திருக்கிறோம். இன்றைய தினத்தில் இங்கு இருந்துவிட்டு நாளை மறுநாள் கிளம்பிடுவோம்,” என்று தமயந்திரன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியர்களின் சமய பாரம்பரியத்தை லபுவானில் தொடர்ந்து பேணி பாதுகாத்து வரும் திருமுகன் ஆலயத்தின் முன்னெடுப்பு வரவேற்ககூடியது என்று விழாவிற்கு சிறப்பு வருகைப் புரிந்த ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
“மிக பிரமாண்டமாக இருக்கக்கூடிய இந்த ஆலயம் லபுவான் தீவிலுள்ள இந்தியர்களுக்கு ஓர் அடையாளமாக திகழும். காரணம் இங்கு தமிழ்ப்பள்ளிகளோ அல்லது தமிழ் சார்ந்த இயக்கமோ அல்லது அமைப்போ கிடையாது. அனைத்துமே இந்த ஆலயத்தை சார்ந்து உள்ளது. அவ்வகையில் இவ்வாலயம் ஒரு சமய அடையாளமாக மட்டும் இல்லாமல் ஒரு சமூக அடையாளமாகவும் உள்ளது,” என்று அவர் கூறினார்.
தைப்பூசத்திற்கு இரு தினங்கள் இருக்கும் நிலையில், கும்பாபிஷேகத்துடன் களைக் கட்டிய அந்த ஆலய வளாகத்தின் முன் புறத்தில் சுமார் 12 அடி நீளம் கொண்ட வேல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கி 48 நாள்களுக்கு ஆலயத்தின் மண்டாலாபிஷேகம் நடைபெறும் வேளையில், திருப்பணிக்காக 38 லட்சம் ரிங்கிட் வரை செலவிடப்பட்டுள்ளதாக ஆலயத் தலைவர் எம்.சுப்ரமணியம் முன்னதாக கூறியிருந்தார்.
Source : Bernama
#Kumbabishegam
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.