பத்துமலை, 09/02/2025 : தைப்பூசத்திற்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், இன்றிரவு வெள்ளி இரதம் பத்துமலை திருத்தலத்தை நோக்கி பயணிக்கவிருக்கின்றது.
இரத ஊர்வலத்தில் தங்களின் யாத்திரையைத் தொடங்கி தைப்பூச காலம் முழுவதும் பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை புரியும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பல்வேறு முதலுதவி அம்சங்களை, ஆண்டுதோறும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.
அதில், இம்முறை 1500 மருத்துவ உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 150 பேர் மருத்துவர்கள் என்று ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஒருங்கிணைப்பாளரும், தைப்பூசத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்பின் பொறுப்பாளருமான டத்தோ டாக்டர் எ.டி. குமரராஜா கூறினார்.
இவ்வாண்டு தைப்பூசத்தில், 20 லட்சம் பேர் வருகைப் புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் அனைத்து தரப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றன.
அவ்வகையில், தைப்பூசத்தின்போது முதலுதவிச் சேவையை வழங்க சுகாதார அமைச்சு, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, மலேசிய பொது பாதுகாப்புத் துறை, செம்பிறைச் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படவிருப்பதாக, டாக்டர் குமரராஜா தெரிவித்தார்.
”வெள்ளி இரதம் 9ஆம் தேதி இரவு, ஜாலான் துன் எச்.எஸ்.லீ மகா மாரியம்மன் கோயிலில் ஆரம்பித்து மீண்டும் 13ஆம் தேதி அதிகாலை மகா மாரியம்மன் கோயிலை அடையும் வரை இந்த மருத்துவ சேவைகள் தொடரும். 1500 உறுப்பினர்கள் இதில் ஈடுப்பட்டிருப்பார்கள். அதில் மருத்துவர்கள் மட்டும் ஏறக்குறைய 150 பேர் இருப்பார்கள். 150 மருத்துவர்களும் முக்கால் பகுதியினர் சுகாதார அமைச்சில் இருந்து வருகின்றனர்”, என்றார் அவர்.
பொதுமக்கள் குறிப்பாக, நீரிழிவு, இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் பிரச்சனை கொண்ட நோயாளிகள் தைப்பூசத்தின் போது, கூட்ட நெரிசல்களில் சிக்கி கொள்வதைத் தவிர்க்குமாறும் டாக்டர் குமரராஜா வலியுறுத்தினார்.
அதோடு, பத்துமலை திருத்தலத்தைச் சுற்றி இருக்கும் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவி தேவைப்படும் மக்களுக்கு உடனடி சேவைகளை வழங்கும் நோக்கில் ஆற்றங்கரை, மேல் பாலம், முதன்மை நுழைவாயில், Dark Cave, மேல் குகை, கே.டி.எம் செல்லும் வழி ஆகிய ஏழு இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக, அவர் விளக்கினார்.
”முக்கியமாக, இதையெல்லாம் செய்தவற்கான காரணம் என்னவென்றால் வரக்கூடிய பக்தர்கள் தைப்பூசத்திற்காக ஆன்மிக அடிப்படையில் வருபவர்களும் சரி, இந்த கலாச்சார நிகழ்வைக் காண்பதற்கு வருபவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான நியாயமான தைப்பூசத்தை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் தேவஸ்தானம் இதில் ஈடுபட்டுள்ளது”, என்று அவர் கூறினார்.
இதனிடையே, இன்று தொடங்கி தைப்பூச காலம் முழுவதும் பணியில் ஈடுபடவிருக்கும் பணியாளர்கள் சிலர் தங்களின் அனுபவங்கள் மற்றும் பயிற்சி முறைகள் குறித்து, பெர்னாமா செய்திகளோடு பகிர்ந்து கொண்டனர்.
”விரதம் இருந்துவிட்டு தான் அவர்கள் வருகின்றனர், அதிகமாக மயக்கம் வருவது, கால் சுளுக்கு, சில நேரங்களில் இருதய நோய் பிரச்சனை உள்ளவர்கள் இருப்பார்கள். படி ஏறும்போது மேலே சென்றதும் சிக்லை ஏற்படுத்தும். ஆபத்தான பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றது. முன்னதாகவே, அதுபோன்ற பிரச்சனைகள் இருந்துள்ளது. அவர்களை இங்கு கொண்டு வந்து முதலுதவிகள் வழங்கி, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ள பிரச்சனைகளும் உள்ளது”, என்று கூறினார் மலேசிய செம்பிறைச் சங்கம் கோம்பாக் வட்டாரத்தின் உதவி தலைவர் அண்ணாதுரை கருப்பன்.
”தைப்பூசத்திற்கான பணிக்கு வருவதற்கு முன்னதாக, அதன் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதாவது, டிசம்பர் மாதத்திலே அவர்களுக்கான பயிற்சி வழங்கப்படும். வழக்கமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தான் தைப்பூசம் கொண்டாடப்படும். ஆக, ஜனவரியில் புதிதாக மற்றும் பழைய உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கினால் தான் அவர்களுக்கு அது பழக்கமாகும். அதே சமயத்தில், தைப்பூசத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக செலாயாங் மருத்துவமனையிலும் பயிற்சிகள் வழங்கப்படும். அவர்களும் நம்முடன் இணைந்து செயல்படுவதால் மருத்துவ பயிற்சிகளை வழங்குவார்கள்”, என்று மலேசிய இந்தியர்கள் தன்னார்வலர் ஆம்புலன்ஸ் சேவை உறுப்பினர் சுரேஷ் முருகேசு கூறினார்.
”ஆக, இதில் இளைஞர்களின் ஈடுபாடு இருக்கின்றது. இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால், போதுமானதாக இல்லை. ஆக, நான் சொல்வது என்னவென்றால் வருடத்தில் தைப்பூசத்தின் போது முருகப்பெருமானுக்காக மூன்று நாட்கள் நாம் இந்த சேவையை செய்கின்றோம். நாம் இந்த சேவையை ஒரு வேலையாக பார்க்காமல், சேவையாக நினைத்து இளைஞர்கள் தங்களை முழு நேரமாக இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு அவர்கள் கலந்து கொள்ளலாம்”, என்றார் மருத்துவ முகாமின் ஒருங்கிணைப்பாளர் லெட்சுமிகாந்தன் மாறன்.
எனவே, பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றனர்.
உதவி தேவைப்படுபவர்கள் 016-2855281 என்ற திரையில் காணும் Hotline எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
Source : Bernama
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#MedicalCamp
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia