கிள்ளான், பிரிக்பீல்ட்சில் குடிநுழைவுத் துறை சிறப்பு சோதனை – 36 லட்சம் ரிங்கிட் பறிமுதல்

கிள்ளான், பிரிக்பீல்ட்சில் குடிநுழைவுத் துறை சிறப்பு சோதனை - 36 லட்சம் ரிங்கிட் பறிமுதல்

புத்ராஜெயா, 08/02/2025 : கடந்த வியாழக்கிழமை சிலாங்கூர், கிள்ளான் சுற்றுவட்டாரம் மற்றும் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்-சில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் 36 லட்சம் ரிங்கிட்டை கைப்பற்றியதுடன் பத்து அந்நிய நாட்டவர்களையும் கைது செய்தது.

சில வணிகத் தளங்கள், சட்டவிரோதமாக பணம் அனுப்பும் கும்பலாக செயல்படுவதை அறிந்த பிறகு, பேங்க் நெகரா மலேசியா  மற்றும் CYBER SECURITY MALAYSIA ஆகியவற்றுடன் இணைந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக  குடிநுழைத்துறை தலைமை இயக்குநர் டத்தோ சக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

அச்சோதனையின்போது, 1,400 EURO, 10,000 YUAN ஆகிய அந்நிய நாணயத்துடன், தங்கம் என நம்பப்படும் ஆபரணங்களையும் தமது தரப்பினர் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

முதற்கட்ட சோதனையில் மூன்று இந்தியர்கள் தங்கள் அனுமதி அட்டையை தவறாகப் பயன்படுத்தியதும், இரு இந்தியர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் கூடுதலாக நாட்டில் தங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது.

இவர்களைத் தவிர்த்து, மூன்று இந்திய ஆண்கள் மற்றும் இரண்டு இந்தோனேசிய பெண்களிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், அவர்களும் நாட்டில் தங்கியிருப்பதற்கான எவ்வித ஏற்புடைய ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தமது அறிக்கையில் சக்காரியா குறிப்பிட்டார்.

தொடர் நடவடிக்கைக்காக 21 முதல் 57 வயது வரையிலான அவ்வனைத்து வெளிநாட்டவர்களும் செமினியில் உள்ள குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட வணிக வளாகங்கள் உரிமம் அற்ற பணம் அனுப்பும் சேவையை வழங்கி வந்ததாகவும், இந்தியா மற்றும் இந்தோனேசியர்களை மட்டுமே தங்களின் வாடிக்கையாளராக கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.

அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் இந்த மோசடிக் கும்பல் மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்களுக்குப் பின்னால் இந்நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளனர்.

கடந்த ஓராண்டு காலமாக இந்த சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஒரு நாளைக்கு 15 முதல் 60 ஆயிரம் ரிங்கிட வரை இவர்கள் பெறுவதாகவும் கூறிய அவர், பெருநாள் காலங்களில் ஒரு லட்சத்து 10,000 ரிங்கிட் வரை அந்த எண்ணிக்கை உயர்வதாகவும் தெரிவித்தார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.