ஹெலிகாப்டர் விபத்து; தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது

ஹெலிகாப்டர் விபத்து; தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது

பெந்தோங், 06/02/2025 : இன்று காலை, பெந்தோங்கின் 9-வது மைல் பழைய சாலை அருகே தரையிறங்கிய Bell 206 L4 ரக ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்ததை பெந்தோங் மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.

எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சைஹாம் முஹமட் கஹார் கூறினார்.

“சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம் போலீஸ் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காலை மணி 10.20 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை மணி 10.20-க்கு ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்த போது அங்கு பணியில் இருந்த ஒருவர் பார்த்துள்ளார். இறங்கும் இடத்தில் இருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்துள்ளது. அதனால் அவர் தரையிறங்கும் போது அதன் பகுதி தரையில் தேய்ந்து தடம் புரண்டுள்ளது,” என்றார் அவர்.

அச்சம்பவத்தில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 27 வயதான களப் பணியாளர் ஃபின்சன் ரெஸ்கி செம்பிரிங், ஹெலிகாப்டரின் முதன்மை விசிரி தாக்கி பலியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், 44 வயதான குஸ்தியடி எனும் விமானி சிறிய காயங்களுடன், மேல் சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் சுமூகமான விசாரணையை உறுதிச் செய்ய விபத்து நிகழ்ந்த இடத்தைப் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

இதனிடையே, இந்த விமான விபத்தில் பலியானவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை தரப்பிடம் சடலத்தை ஒப்படைப்பதற்கு முன்னர், அரச மலேசிய போலீஸ் படை தடயவியல் குழு, இன்று மாலை 4 மணிக்கு சம்பவ இடத்தில் விசாரணையை நிறைவு செய்து விட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விமான விபத்து விசாரணை பிரிவைச் சேர்ந்த விமான விபத்து விசாரணை குழு தற்போது சம்பவ இடத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

Source : Bernama

#HelicopterCrash
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia