ஈப்போ, 06/01/2025 : நாட்டில் தைப்பூசத் திருநாளுக்கு மிகவும் பிரபலமான மூன்றாவது ஆலயமான பேராக்கில் உள்ள கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் இவ்வாண்டு சுமார் நான்கு லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இத்திருநாள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய ஈப்போ மாநகராண்மைக் கழகம், அரச மலேசிய போலீஸ் படை, தீயணைப்புப்படை, சுகாதாரத் துறை போன்ற பல்வேறு தரப்புகளுடன் இணைந்து தங்கள் தரப்பு பணியாற்றவிருப்பதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் தெரிவித்தார்.
பேராக் கல்லுமலை ஆலயத்தில், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா ஏற்பாட்டில் இத்திருவிழா நடைபெற்றாலும், பல அரசாங்கத் துறைகளின் பங்களிப்புடன் மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது என்று சிவநேசன் குறிப்பிட்டார்.
இம்முறை தைப்பூசத்தின்போது ரத ஊர்வலத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அதை பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
”இரதம் விரைவில் ஆலயத்தைச் சென்றடைய, இரதம் நிறுத்தப்படும் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஈப்போ மாநகராண்மைக் கழகம் நிர்ணயித்த அளவைக் காட்டிலும் பெரிதாக அமைக்கப்படும் கூடாரங்கள் அகற்றப்படும் என்பதை நினைவுறுத்துகிறேன். இத்திருவிழாவை பல்லின மக்கள் பார்க்கின்றனர். எனவே, கலாச்சாரத்தைப் பின்பற்றி நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.
இன்று மாநில அரசாங்கச் செயலகத்தில், தைப்பூச விழாவை முன்னிட்டு அரசாங்கத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பிற்குப் பின்னர் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான சிவநேசன் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.
வழக்கம் போல் தைப்பூச முதல் நாள் அதாவது புந்தோங் சுங்கை பாரி வழியில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து இரதம் புறப்பட்டு குனோங் சிரோவில் உள்ள கல்லுமலையை வந்தடையும்.
தைப்பூச மறுநாள் கல்லுமலை ஆலயத்தில் இருந்து இரத புறப்பாடு நடைபெற்று மீண்டும் மகா மாரியம்மன் ஆலயத்தை வந்தடையும்.
இத்திருவிழாவின்போது, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சுமார் 400 போலீசார் பணியில் இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
”அந்த 400 பேரில், சில போலீசார் சாதாரண உடையில் இருப்பர். எனவே, தகாத முறையிலோ அல்லது வார்த்தைகளையோ பயன்படுத்தினால் மாநில அரசாங்கத்தின் உத்தரவின்படி அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மதுபானங்கள் அருந்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தகாத உடைகளை அணிந்தோ அல்லது நாகரீகமற்ற முறையிலோ நடத்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, தைப்பூசத்தை முன்னிட்டு கல்லுமலை ஆலயத்தில் அதற்கான வசதிகளும் ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன தலைவர் ஆர். சீத்தாராமன் கூறினார்.
”இரதம் ஆலயத்தை வந்தடைந்ததும், பால் குடம், காவடி எடுப்பவர்கள் தங்களின் நேர்த்தின் கடனை நிறைவேற்றத் தொடங்கி விடுவர். சிறுவர்கள் , மகளிர் மற்றும் முதியோர் காவடிகள் சுமந்து காணிக்கை செலுத்த கல்லுமலை அருகில் உள்ள ஆற்றாங்கரையில் இருந்து எடுத்து வருவதற்கான ஏற்பாட்டை ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா செய்துள்ளது,” என்றார் அவர்.
மேலும், இவ்வாண்டு தைப்பூசத்தின்போது, கண்ட இடங்களில் குப்பையைப் போடாமல், நெகிழிப் பைகளைப் பயன்படுத்தாமல் சுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறும் சீத்தாராமன் கேட்டுக் கொண்டார்.
Source : Bernama
#ASivanesan
IpohThaipusam2025
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia