பகாங், 06/02/2025 : பெந்தோங்கில், இன்று காலை எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய, Bell 206 L4 ரக ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததில், களப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் 100 விழுக்காடு முற்றாக தீக்கிரையான வேளையில், அதனைச் செலுத்திய இந்தோனேசியப் பிரஜையான விமானி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவம், கோலாலம்பூர்-பெந்தோங் பழைய சாலையின் கொலம் ஆயர் பானாஸ் அருகில் நிகழ்ந்ததாக, பகாங் மாநில, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தொடர்பு அதிகாரி சுல்ஃபட்லி சகாரியா கூறினார்.
உயிரிழந்தவரின் உடல், மேல் நடவடிக்கைக்காக பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தீயணைப்பு இயந்திர வாகனத்துடன் பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரி ஒருவர், காலை மணி 10.52 அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பகாங் மாநில JBPM-யின் செயல்பாட்டு மையம் அறிவித்திருந்தது.
எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதாக, அச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
இதனிடையே, ‘MHS Aviation’ நிறுவனத்திடமிருந்து வாடகைக்குப் பெறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், வான்வழிப் பணியை மேற்கொண்டு வந்ததாக மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம், சி.ஏ.ஏ.எம், வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
Source : Bernama
#HelicopterFire
#JBPM
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.