தண்ணீர்மலை, 02/02/2025 : மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தினர் Dr.முரளி ஆறுமுகம் அவர்களின் தலைமையில் தைப்பூசத்தை முன்னிட்டு சக்கரநாற்காலியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில் மலை மீது சமந்து சென்று தரிசனம் செய்வித்த சிறப்பான பணியை இன்று 02 பிப்ரவரி 2025 மேற்கொண்டனர்.
தமிழன் உதவும் கரங்கள் உறுப்பினர்களும் தன்னார்வலர்களும் கடந்த 25 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தைப்புசத்தின் போது படியேற முடியாத மாற்றுத்திறனாளிகளை சுமந்து சென்று முருகப் பெருமானை தரிசிக்க வைத்து அருள் பெற்று தரும் அரும்பணியை செய்து வருகின்றனர். கடந்த 25 வருடங்களாக பத்துமலை முருகன் ஆலயத்தில் இந்த பணியை செவ்வனே சிரமேற்கொண்டு செய்து வரும் முரளி தலைமையிலான தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தினர் இந்த 2025 வருட தைப்பூசத்தை முன்னிட்டு 26 ஆவது வருட சேவையாக பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில் வளாகத்தில் இந்த சேவையை செய்தனர்.
அந்த வகையில் தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தினர் சுமார் 25 மாற்றுத்திறனாளிகளை தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் அடிவாரத்தில் இருந்து 513 படிகட்டுகள் வழியாக சுமந்து சென்று மலை மீது அருள் புரியும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து அருள் பெற வழி வகை செய்தனர். சுமார் 125 தன்னார்வலர்கள் இந்த 25 மாற்றுத்திறனாளிகளையும் அவர்களின் சக்கர நாற்காளிகளுடன் சுமந்து சென்று முருகனை தரிசிக்க வைத்த இந்த சிறப்பான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் தொடங்கி இரவு 08.00 மணி வரை நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பினாங்கு இந்து அறநிலைய வாரியம் மலேசிய தமிழன் உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
முதல் முறையாக தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமியை தரிசித்த மாற்றுத்திறனாளி பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அரிய வாய்ப்பிற்கு வழிவகை செய்து உதவிய தமிழன் உதவும் கரங்கள் இயக்க தன்னார்வலர்கள் அனைவருக்கும் மற்றும் அதன் தலைவர் திரு முரளி அவர்களுக்கும் தங்களின் நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த தருணத்தில் இந்த சேவையை தொடர்ந்து செய்து வரும் முரளி தலைமையிலான தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தினர் அனைவருக்கும் என் தமிழ் ஊடகம் தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
#TamilanUthavumKangkal
#DrMuraly
#Thaipusam
#ThanneerMalai
#ArulmiguBalathandayuthabaniTemplePenang
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#CharityEvent2025
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia