ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறை நல்ல வரவேற்பைப் பெறுகிறது- இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பாராட்டு

ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறை நல்ல வரவேற்பைப் பெறுகிறது- இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பாராட்டு

ஷா அலாம், 02/02/2025 : செக்‌ஷன் 23, ஷா அலாமில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலில் ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறையை அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவில் மகா கும்பாபிஷேவ விழாவில் அமைச்சர் கலந்து கொண்டதோடு ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறையை செயலியையும் அது தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் வழங்கினார்.

இந்தக் கோவிலில் அறிமுக்கப்படுத்தப்பட்ட இலக்கவியல் நிர்வாக நடைமுறை பூஜைக்கான பொருட்களை விற்க மட்டும் அல்லாது, அர்ச்சனை, உபயம், திருமண முன்னேற்பாடுகள், ஆலய விழாக்களுக்கான நேரடி ஒளிபரப்பு, ஆலயத்தின் வழி நன்கொடை வழங்குதல், நிதி நிர்வாகம், நீர்த்தார் சடங்கு நிர்வாக முறை, என 50-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகளை உள்ளடக்கியுள்ளது. இதன்வழி ஆலயங்கள் மிகத் துள்ளியமாகவும், முறையாகவும், விரைவாகவும் ஆலயச் செயல்பாடுகளை நிர்வகிக்கலாம். அதோடு கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஒரே இடத்தில் விரைவாக தங்களுக்கன சேவைகளை, குறித்த நேரத்தில் விரைவாக பெற்றுக் கொள்ளலாம்.

கால மாற்றத்திற்கு ஏற்ப கோவில்களில் இது போன்ற நவீன வசதிகளை அமைத்துக் கொடுப்பது அவசியம் என அமைச்சர் கூறினார். இந்த அவசர காலத்தில், பக்தர்கள் கோவிலுக்குச் சென்று முன் ஏற்பாடுகளை செய்ய நேரமில்லாத நிலையில், இணையம் வழியாக இலக்கவியல் முறையில் முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு, பின்னர் நேரடியாகச் சென்று பூஜை புனஸ்காரங்களில் கலந்து கொள்ளலாம்.

திறன்பேசியில் இது தொடர்பான செயலியைப் பதிவேற்றம் செய்துவிட்டால், தேவையான போது, சமயச் சடங்குகளுக்கான முன்னேற்பாடுகளை திறன்பேசி வாயிலாகவே செய்து முடித்துவிடும் வாய்ப்பை இந்தச் செயலி வழங்குகிறது எனவும், இதுபோன்ற முயற்சிகளை இலக்கவியல் அமைச்சு பெரிதும் வரவேற்பதாகவும் கோபிந் சிங் தெரிவித்தார். நாடு இலக்கவியல் நோக்கி பயணிப்பதை இது புலப்படுத்துகிறது.

சமயச் சடங்கு தொடர்பான சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாது, சமய பண்பாட்டு நிகழ்ச்சிகளின் விபரங்களையும் விளக்கங்களையும் இந்தச் செயலியின் வழி மக்கள் பெற்றுக் கொள்ளலாம். இதனால் ஆலயங்கள் பக்தர்களுடனான தொடர்பை வலுப்படுத்த இயலும். பக்தர்கள் கோவில் வட்டாரத்தில் வசித்தாலும், வேறு இடங்களுக்கு மாற்றலாகிச் சென்றாலும் கூட ஆலயத்துடன் தொடர்பில் இருக்க முடியும்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பதாக இந்தக் கோவில் நிர்வாகத்தினர் இலக்கவியல் நிர்வாக நடைமுறை திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த கோவிலில் இனி இலக்கவியல் முறையிலும் நிர்வாகம் நடைபெறும். இந்தக் கோவில் மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள பிற கோவில் நிர்வாகத்தினரும் இது போன்ற இலக்கவியல் நிர்வாக நடைமுறை திட்டத்தில் ஆர்வம் கொண்டுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரையில் நம் நாட்டிலுள்ள 40-க்கும் மேற்பட்ட கோவில்கள் இது போன்ற இலக்கவியல்(டிஜிட்டல்) நிர்வாக நடைமுறையை செயல் படுத்திவிட்டனர் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் அல்லாமல், நாடு முழுவதிலுமுள்ள கோவில் நிர்வாகத்தினர் இந்த இலக்கவியல் நிர்வாக நடைமுறையை வரவேற்கின்றனர் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு, சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர், வட்டாரத் தலைவர்கள், பொது மக்கள் என இந்த நிகழ்ச்சிக்கு திரளானோர் கலந்து கொண்டனர்.

#TempleKumbabishegam
#GobindSinghDeo
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.