பத்துமலை, 05/02/2025 : அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு, சிலாங்கூர் பத்துமலை திருத்தலத்திற்கு 18-இல் இருந்து 20 லட்சம் மக்கள் வருகைப் புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆண்டு தோறும் அதிகரிக்கும் பொது மக்கள் மற்றும் பக்தர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பல தயார்நிலை பணிகளை ஆலய நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக கோலாலம்பூர், ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.
”20 லட்சம் மக்கள் வருவதற்கூடிய ஏற்பாடுகள் இருப்பதாக கூறியிருக்கின்றார்கள். அதற்கான காரணம் நிறைய சுற்றுப்பயணிகள், மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்நாட்டுக்கு தைப்பூசத்தைப் பார்ப்பதற்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகள் எடுத்து விட்டதாக கூறியிருக்கின்றார்கள்”, என்று அவர் கூறினார்.
பத்துமலை திருத்தலத்தில் நேர்த்திக் கடனை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக வழித்தடங்களை மறுசீரமைப்பு செய்து வருவதுடன், திருத்தலத்தின் அருகில் உள்ள ஆற்றங்கரையில் துப்புரவு பணிகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அவர் தெரிவித்தார்.
பல்லின மக்கள் வருகை புரியும் இந்த திருநாளின்போது, இந்தியர்களின் கலாச்சாரத்திற்குச் சீரழிவை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாமென்று டான் ஶ்ரீ நடராஜா பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
”அதனால் வெள்ளி இரதம் புறப்படும்போது நாம் கட்டுக்கோப்பாக நடந்து கொள்ள வேண்டும். நிறைய ஐ.பி.கே கோலாலம்பூர், டாங் வங்கி போலீஸ், கோம்பாக் ஆகிய இடங்களிலிருந்து நிறைய போலீஸ் அதிகாரிகள் அவர்களுடைய சேவைகளைச் செய்வார்கள். அதேவேளையில், நாம் எந்தவிதமான பிரச்சனையிலும் மாட்டிக் கொண்டு நம்மை நாமே சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்”, என்றார் அவர்.
அதோடு, நேர்த்திக் கடனை செலுத்தும் பக்தர்கள் மரபு மாராமல் மஞ்சள் ஆடையை அணிந்துக் கொண்டு திருத்தலத்திற்கு வரும்படி அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, தைப்பூசத்திற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 9-ஆம் தேதி கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து இரவு 9 மணியளவில் வெள்ளி ரதம் புறப்பட்டு, மறுநாள் மாலை இரதம் பத்துமலைத் திருத்தலத்தை வந்தடையும்.
அதன் பின்னர், பத்துமலையில் தைப்பூசத் திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்றும் நடராஜா தெரிவித்தார்.
இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
Source : Bernama
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.