சைபர்ஜெயா, 24/01/2025 : இன்றைய நவீன தொழில்நுட்ப சூழலில் அதிக ஆள்பலம் தேவைப்படும் துறைகளில், இணைய பாதுகாப்பு துறையும் ஒன்றாகும்.
எனினும், அத்துறையில் பட்டப்படிப்பை முடிந்திருந்தும், அதில் பணியாற்றுவதற்கான சிக்கல்களை மாணவர்கள், குறிப்பாக, இந்திய பட்டதாரிகள் தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர்.
அதனை கருத்தில் கொண்டு, EC-Council எனப்படும் பயிற்சி கழகம் வழி இணைய பாதுகாப்பு துறைக்கான தொழில்திறன் பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்தை, இந்திய உருமாற்று பிரிவான மித்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.
பெரும்பான்மையான மாணவர்கள் தகவல் தொழிநுட்ப துறையில் தங்களின் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், திறன் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையில் உள்ள நீண்ட இடைவெளியின் காரணமாக அவர்களால் இணையப் பாதுகாப்பு துறையில் முறையாக பணியாற்ற முடியவில்லை.
எனவே, EC-Council-உடன் இணைந்து Intellize Tech Services நிறுவனத்தின் மூலமாக இந்திய மாணவர்களுக்கென மித்ரா பிரத்தியேகமாக அறிமுகம் செய்துள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 200 மாணவர்கள் பயனடைவார்கள் என்று மித்ரா சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
“ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் குறிப்பிட்ட சில விடயங்களில் மட்டுமே அதற்கான தேவைகள் அதிகம் உள்ளது. NANO, AI இன்னும் பல. ஆக, இதுபோல் மித்ரா உருவாக்கிய திட்டம் அவர்களை இன்னும் மேம்படுத்தி, குறிப்பிட்ட அந்த திறனில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான தன்மைகளை உயர்த்துவதும், வேலை வாய்ப்புகளைத் தேடி கொடுப்பதையும் நாங்கள் கடமையாக ஏற்றுக் கொள்கிறோம்”, என்றார் அவர்.
மேலும், தகவல் தொழிநுட்ப துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, வேலையிண்மை விகிதத்தைக் குறைக்கவும் இத்திட்டம் பெரும் பயனாக அமையும் என்று அவர் விளக்கினார்.
மாணவர்களின் பயிற்சி காலம் முழுவதும், அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படுவதுடன், பயிற்சியை வெற்றிரமாக முடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கவுள்ளதாக பிரபாகரன் கூறினார்.
“ஆனால், இந்த வாய்ப்புகள் இன்னும் திறந்திருக்கின்றது. தாராளமாக பட்டதாரிகள், தொழிநுட்ப துறைகளில் வேலை தேடுபவர்கள் இதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, வேலை வாய்ப்புகளையும் நாங்கள் உங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். அதில், மாதம் வருமானம் குறைந்தது 3000 ரிங்கிட் வரையில் நாங்கள் உங்களுக்குத் தேடி கொடுப்போம்”, என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தின் மூலம் முறையாக பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு, EC-Council Security Specialist, ECSS, Certified Network Defender, CND மற்றும் Certified Ethical Hacker, CEH ஆகிய மூன்று வகையான தொழில்முறை சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதனிடையே, சுமார் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சியில் மாணவர்கள் தொழில்துறைக்குத் தேவையான பல்வேறு திறன்களைக் கற்றுக் கொள்வதாக கூறுகின்றார், மலேசிய இணையப் பாதுகாப்பு சைபர்சேவ்வின் தூதர் டாக்டர் கவிதா முத்தி.
“இன்று நாம் எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகள் என்னவென்றால், அத்தியாவசிய மென் திறன்கள். நான் தொழில்நுட்ப துறையில் வேலை செய்தால் இயந்திரங்களுக்குப் பின்னால் இருந்து தான் வேலை செய்வேன் என்று அர்த்தமல்ல. அதாவது, நீங்கள் உங்கள் குழு உறுப்பினர்களுடன் எவ்வாறு பேசி கலந்துரையாட வேண்டும், எவ்வாறு நீங்கள் ஒன்றை முன்மொழிய வேண்டும், எப்படி எழுதுவது, வேலை இடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் போன்ற திறன்கள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றது”, என்று அவர் கூறினார்.
இப்பயிற்சி திட்டத்திற்கான முதற்கட்ட விண்ணப்பம், இம்மாதம் 31-ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருப்பதால், ஆர்வம் உள்ள மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Source : Bernama
#PPrabakaran
#MITRA
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.