கோலா குபு பாரு, 23/01/2025 : பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களை வணிகம், தொழில்திறன், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றும் முயற்சிகளில் இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக, இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் வாழ்க்கை தரத்தையும் கருத்தில் கொண்டு, ஜி.டி.எல் எனப்படும் கொள்கலன் லாரிகளைச் செலுத்துவதற்கு தொழில்திறன் வாகன ஓட்டுனர் உரிம உதவி திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
லாரி ஓட்டுனர்கள் மட்டுமின்றி போக்குவரத்து மற்றும் உபகரணத் துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கும் இளைஞர்களுக்கும் இத்திட்டம் பெரிதும் பயனளிக்கும் என்று மித்ரா சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
பி.எஸ் சாமி அகாடமி வாகனம் ஓட்டும் பயிற்சி மையத்தின் ஒத்துழைப்போடு, சுமார் 100 பேருக்கு ஜி.டி.எல் உதவி திட்டத்திற்கான வாய்ப்பு இன்று வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
”தொடக்க காலத்தில், இந்த திட்டத்தை நாங்கள் அறிவிக்கும்போது 2000-க்கும் அதிகமானோர் அதற்கு விண்ணப்பம் செய்தார்கள். ஆனால், நாங்கள் நிறைய செயல்முறைகளை முடித்து 654 பேருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கின்றோம். இன்று, சிலாங்கூரில் இருக்கக் கூடிய பி.எஸ் சாமி அகாடமி அவரின் மூலமாக 100 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது”, என்றார் அவர்.
அதோடு, லாரி ஓட்டுனர்களைத் தாம் ஆதரிப்பதாக சிலர் கூறும் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்த பிரபாகரன், தற்போது நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் லாரி ஓட்டும் துறைகளில் ஆட்கள் அதிகம் தேவைப்படுவதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, இத்திட்டம் அவர்களுக்குப் பெரிதும் பயனாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
”நிறைய வாய்ப்புகள் வெளியில் இருக்கின்றது. குறிப்பாக, தளவாடத் துறையில். நிறைய லாரி ஓட்டுனர்கள் தேவை என்று அரசாங்கமே அறிவித்துள்ளது. ஆக, அதன் மூலமாக இந்தியர்கள் இதில் விடுப்படக் கூடாது என்ற நோக்கத்தில் மித்ரா எடுத்த திட்டம்தான் இந்த ஜி.டி.எல் திட்டம். நிறைய பேர் சொல்கின்றார்கள் லாரி ஓட்டுனர்களை ஆதரிப்பதாக. இல்லை, சொல்பவர்கள் மேற்படிப்பு முடித்து விட்டு நல்ல உத்யோகத்தில் இருக்கின்றனர். ஆனால், கல்வி நிலை குறைவாக இருந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு”, என்று பிரபாகரன் கூறினார்.
எனினும், இத்திட்டம் குறித்து அறிந்தவர்கள் அதற்கான செயல்முறைகளைப் பற்றி தம்மிடம் கேட்டறிந்து கொண்டதுடன், விண்ணப்பத்தாரர்களின் விபரங்களை நன்கு ஆராய்ந்த பிறகே அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக, பி.எஸ் சாமி அகாடமியின் இயக்குனர் கணேஷ் பி.எஸ் சாமி கூறினார்.
”நிறைய பேர் தொலைப்பேசியின் மூலம் எங்களுக்கு அழைப்பு கொடுத்தனர். ஆனாலும், நிறைய பேர் இதற்கு விண்ணப்பம் செய்தும் கூட அவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் எடுத்துக் கொண்டு, மை-சலாம், பி40 மற்றும் சம்மன் போன்ற தகவல்களை நாங்கள் சரிப் பார்த்தோம். அதன் பிறகு, அவை அனைத்தும் மீண்டும் மித்ராவிற்கு அனுப்பினோம்”, என்று அவர் தெரிவித்தார்.
மித்ராவின் இத்தகைய வாய்ப்புகள் மேலும் பல இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவும் என்று உதவியைப் பெற்றுக் கொண்டு சிலர் பெர்னாமா செய்திகளோடு பகிர்ந்து கொண்டனர்.
”நான் எதார்த்தமாக தான் விண்ணப்பம் செய்தேன். நானும் அவர்களில் ஒரு அதிஷ்டசாலியென்று நினைக்கின்றேன். ஆக, நான் இதை முழுமையாக பயன்படுத்துவேன். ஏனெனில், தற்போதைய சூழலில் நிறைய பேருக்கு இந்த வருமான சிக்கல் இருக்கின்றது. ஆக, இதுபோன்ற வாய்ப்புகளின் மூலம் நம்முடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றி கொள்ள முடியும்”, என்று தெரிவித்தார் பத்துமலையைச் சேர்ந்த லோகராஜன் ரத்னசாமி.
இதனிடையே, இத்திட்டத்தில் விண்ணப்பித்து தகுதி பெற்றுள்ள எஞ்சிய 550 பேருக்கு, குறிப்பிட்ட மாநிலங்கள்தோறும் கட்டம் கட்டமாக இந்த உதவி வழங்கப்படும் என்று பிரபாகரன் பரமேஸ்வரன் கூறினார்.
Source : Bernama
#PPrabakaran
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.