புத்ராஜெயா, 23/01/2025 : 2025ஆம் ஆண்டின் ஆசியானுக்குத் தலைமையேற்றிருப்பதை முன்னிட்டு ஆசியான் வட்டாரத்தில் உள்ள ஊடக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து ஒத்துழைப்பை வலுப்படுத்த தேசிய ஊடகவியலாளர் தினம் ஹவானாவை மலேசியா பயன்படுத்திக் கொள்ளும்.
ஒட்டுமொத்தமாக, ஆசியான் வட்டாரத்தில் ஊடகத் தொழில்துறை மாற்றத்தின் குறிக்கோள் மற்றும் சவால்களைப் பற்றி கலந்துரையாட இது ஒரு முக்கியக் களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இதன் தொடர்பான பிரச்சனைகள் குறிப்பாக இலக்கவியல் ஊடக உலகின் தீவிர சவால்கள் குறித்து ஆழமாக கலந்துரையாட ஆசியான் அளவிலான சிறப்பு நிகழ்ச்சிகளைக் கோலாலம்பூரில் நடத்தவும் தமது தரப்பு திட்டமிட்டுள்ளதாக ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
அதற்கான முயற்சிகளாக ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சில ஊடகப் பிரதிநிதிகளும் அதில் பங்கேற்க அழைக்கப்படுவர்.
”அனைத்து ஊடகங்களும் இப்போது சமூக ஊடகங்களின் சவால்களை எதிர்நோக்குவதை நாங்கள் அறிகிறோம். ஊடக நிறுவனங்களுக்கான விளம்பர செலவுகள் குறைந்துவிட்டன. மேலும் பல நிறுவனங்கள் தங்களது விளம்பர நிதியைச் சமூக ஊடக தளங்களில் செலவிடுகின்றன. அதுமட்டுமின்றி ஊடக சுதந்திரம், நெறிமுறைகள், நாளிதழ், மற்றும் போலி செய்திகள் கூட ஊடகத்தின் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதால் ஊடகங்கள் பாதிக்கப்படுகின்றன”, என்று அவர் கூறினார்.
மேலும், எழுப்பப்பட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அளவில் கொண்டு செல்வதற்குச் சில தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளிலும் கவனம் செலுத்தப்படும் என்று ஃபஹ்மி கூறினார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்பு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, மைடிஜிட்டல் ஐ.டி பதிவு திருப்தியற்ற நிலையில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது தனித்த உள் நுழைவு செயல்முறையாக அச்செயலியைப் பயன்படுத்துவது தொடர்பான புரிந்தலை மேம்படுத்த வேண்டும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.
நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் எளிதாக்குவதற்கும் நடப்பில் உள்ள தளங்களை இந்த இலக்கவியல் சேவை ஒன்றிணைப்பதாக அவர் விளக்கினார்.
”மைடிஜிட்டல் ஐ.டி மூலம் அனைத்து அரசாங்க விண்ணப்பங்களுக்கும் ஒரு உள் நுழைவைப் பயன்படுத்துவதை செயல்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும். ஏனென்றால், அவர்கள் MyJPJ செயலியில் நுழைந்தால், எல்.எஹ்.டி.என் செயலியில் நுழைந்தால் என்று அரசாங்கத்தின் எந்தவொரு தளத்திலும் சுய விவரங்களைக் குறிப்பிட்டு புதிய கணக்கைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. இது பயனர்களுக்கு எளிதாக இருப்பதோடு அரசாங்கத்திற்கும் சேமிப்பாக இருக்கும் என்று நாங்கள் பார்க்கிறோம்”, என்றார் அவர்.
Source : Bernama
#FahmiFadzil
#Hawana
#HariWartawanNasional
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.