கோலாலம்பூர், 23/01/2025 : வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள புதிய குறைந்தபட்ச ஊதிய அமலாக்கத்தைப் பின்பற்றுவதில் SME எனப்படும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு தொடர் உதவிகளை வழங்கவுள்ளது.
நிறுவனங்களின் இலக்குகளை அடைவதற்கான செலவினங்கள் திறம்பட நிர்வகிப்பதற்கு SME-களுக்கு உதவும் வகையில் நிதி நிர்வகிப்பு பயிற்சிகளும் இதில் அடங்கும் என்று அதன் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
”நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இது ஒரு நடவடிக்கையாகும். அதோடு, மலேசிய தொழிலாளர்கள் தங்களின் தினசரி வாழ்க்கை சூழலை மேம்படுத்தக்கூடிய ஊதியத்தை வழங்குகிறது. தயார்நிலை அடிப்படையில் பார்த்தால் தற்போது மிதமான அளவில் உள்ளது. ஆனால், அமைச்சு இச்செயல்முறையை எளிதாக்க அதிகமான உதவிகளை வழங்குகிறது”, என்று அவர் கூறினார்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான மலேசிய சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் மீட்பு மற்றும் வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ ஶ்ரீ ரமணன் அவ்வாறு தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி முதலாம் தேதி தொடங்கி குறைந்தபட்ச ஊதிய விகிதம் 1,500 ரிங்கிட்டில் இருந்து 1,700 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும் என்று கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
அதேவேளையில், அனைத்துலக அளவில் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருக்க நிலைத்தன்மை, இலக்கவியல் வர்த்தக தடை மற்றும் கூட்டுறவு நிர்வகிப்பு உட்பட உலகளாவிய தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று உள்நாட்டு SME களுக்கு ரமணன் பரிந்துரைத்தார்.
Source : Bernama
#DtukSeriRRamanan
#MinimumSalary
#SME
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia