நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 26 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கலாம்

நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 26 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கலாம்

கோலாலம்பூர், 22/01/2025 : அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்குக்கரை, வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகளில் நாளொன்றுக்கு 26 லட்சம் வாகனங்கள் வரை அதன் எண்ணிக்கை கணிசமாக உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 24 தொடங்கி 28-ஆம் தேதி வரை நீண்ட விடுமுறையை முன்னிட்டு, கோலாலம்பூரிலிருந்து வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்எல்எமின் தலைமை இயக்குனர் டத்தோ சசாலி ஹாருன் கூறினார்.

அதேவேளையில், மீண்டும் கோலாலம்பூருக்குத் திரும்பும் வாகனங்களின் எண்ணிக்கை, பிப்ரவரி மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் தேதிகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

22 லட்சம் வாகனங்கள் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாகனங்கள் கேஎல்-காராக் நெடுஞ்சாலை, 82 ஆயிரம் வாகனங்கள் முதற்கட்ட கிழக்குக்கரை நெடுஞ்சாலை, 48 ஆயிரம் வாகனங்கள் இரண்டாம் கட்ட கிழக்குக்கரை நெடுஞ்சாலை மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் டபிள்யூ.சி.இ எனப்படும் மேற்கு கடற்கரை விரைவுச்சாலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பெருநாட்காலம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, நாளை தொடங்கி பிப்ரவரி மூன்றாம் தேதி வரை, அவசர பணிகளைத் தவிர்த்து எந்தவொரு சாலை தடங்களிலும் தடையை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்து நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களுக்கும், எல்எல்எம் உத்தரவிட்டுள்ளது.

Source : Bernama

#ChineseNewYear
#Traffic
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.