ஊதிய உயர்வுக்குத் தனியார் நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர்

ஊதிய உயர்வுக்குத் தனியார் நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும் - பிரதமர்

சுபாங் ஜெயா, 21/12/2024 : ஊதிய உயர்வுக்கு ஈடாக பொருளாதார வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதால் ஊதிய விகித விவகாரம் மிகவும் முக்கியமான ஒன்று என்று பிரதமர் தெரிவித்தார்.

எனவே, இதற்கு அரசாங்கம் மட்டுமின்றி அதிக லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஊதிய உயர்வை வழங்கும்படி தனியார் துறையைத் தாம் வற்புறுத்த முடியாது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இருப்பினும், அதிகமான நிதி ஒதுக்கீட்டை உட்படுத்தியபோதிலும் பொது சேவை துறை ஊழியர்களுக்குத் தாம் அளித்துள்ள ஊதிய மறுசீரமைப்பு மிகச் சிறந்த ஓர் உதாரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

“பொது சேவையின் செயல்திறன் அதிகரிக்கவும், திறமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் மற்றும் அழுத்தம் கொடுக்கிறோம். ஊழல் மற்றும் மோசடி அல்லது சோம்பேறித்தனம் உட்பட மந்தநிலை ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். நாங்கள் இதை கடுமையாகக் கருதுகிறோம். பின்னர் ஊதியம் உயரவில்லை, எனக்கு இது நியாயமில்லை. அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இலாபம் நன்றாகப் பதிவு செய்யப்பட்டால் அதிலிருந்து அவர்களின் ஊழியர்களுக்கு சிறு பங்கை அளிக்க வேண்டும். ஊதிய விகிதங்கள் உயர்த்தப்பட வேண்டும். இப்போது குறைந்தபட்ச ஊதியமான 1,700 ரிங்கிட் ஒரு தொடக்கமாகும். ஆனால், ஒரு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் 100 கோடி ரிங்கிட் இலாபம் ஈட்டுகிறது என்றால், அதனை (ஊதிய உயர்வு) அந்நிறுவனம் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

தங்கள் துறைகளில் ஏதேனும் முறைகேடுகள் நிகழும் பட்சத்தில் அவற்றைக் கண்காணித்து புகாரளிக்குமாறு தேசிய தலைமைச் செயலாளர், தலைமை இயக்குநர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம் நிர்வாக விவகாரங்களுக்கு அடுத்தாண்டும் தாம் முன்னுரிமையை அளிக்கவிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

Source : Bernama

#PMAnwar
#SalaryHike
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia