ரவாங் புனித யூதா ததேயு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு வழிபாடு

ரவாங் புனித யூதா ததேயு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு வழிபாடு

ரவாங், 25/12/2024 : அன்பின் சிகரமாய் குழந்தை இயேசுவை வீடுகளில் கொண்டாடுவதற்கு முந்தைய நாளில், உலகமெங்கிலும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துவர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்பர்.

அந்த வகையில், சிலாங்கூர் ரவாங், புனித யூதா ததேயு தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் சிறப்பு வழிப்பாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவில், ஒன்றாக தேவாலையங்களில் கூடி குழந்தை இயேசுவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பது கிறிஸ்துவர்களின் வழிபாட்டில் ஓர் அங்கமாக உள்ளது.

உலகத்தை அறியாமையில் இருந்து மீட்க, தேவ ஒளியாக இயேசு கிறிஸ்து இருளில் தோன்றியதாகவும், அனைவரின் வாழ்வில் இருக்கும் துன்பங்களை இயேசு கிறிஸ்து அகற்றி, தன்னுடைய அருளை வழங்குவார் என்பது நம்பிக்கையாகும்.

பிரார்த்தனையில் கலந்து கொண்ட மக்களின் திரளான வருகை மகிழ்ச்சி அளிப்பதாக தேவாலயத்தின் பங்கு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

“பெருந்தொற்றுக்குப் பிறகு, மக்களின் வருகையும் ஈடுபாடும் குறைவாக இருந்தது. ஆனால், மக்கள் மீண்டும் இன்று ஒன்றுகூடி வழிபாட்டிற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, நமது கிழக்கு பகுதியைச் சேர்ந்த மலேசியர்கள், அதாவது சபா, சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பல இடங்களில் பணிபுரிந்து வருவதால் இந்தத் தேவாலயத்தில் தங்களின் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். ஆகையால், என்னுடைய ஒரே ஆசை,எண்ணம் என்னவென்றால் நான் இன்னும் ஒன்றுபட்டு ஒரே பங்காக இந்த விழாவைக் கொண்டாட வேண்டும்” என்று தேவாலயத்தின் பங்கு குருவான மறைத்திரு வின்சென்ட் தோமஸ் தெரிவித்தார்.

“ஒரு காலத்தில், 700 மக்கள் மட்டுமே வந்த இந்த தேவாலயத்தில் தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரளாக வருகை புரிந்து இந்தப் பங்கில் இணைந்துள்ளனர். இன்னும் 3 ஆண்டு காலங்களில், நாம் புதிய ஆலயத்திற்குச் செல்லவுள்ளோம். அதன் எதிர்பார்ர்ப்பு எங்கள் இடையில் அதிகமாகவே உள்ளன. காரணம், அது ஒரு ரவாங் பங்கு மக்களின் பெரிய ஆலயமாக அமைய போகிறது. அது எங்களின் வளர்ச்சியாகவே நான் கருதுகிறேன். நாங்கள் அனைவரும் அதை நினைத்து உற்சாகமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறோம். இந்நன்னாளில் இதனை அறிவிப்பதில் பேருவகை அடைகிறேன்,” என்றார் பங்கின் ஒருங்கிணைப்பாளர் குழுவின் பொறுப்பாளர் பத்திநாதன்.

இந்நன்னாளில், பரிசுகளையும் வாழ்த்துகளையும் பரிமாறி கொள்ளும் அதே வேளை, உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் ஒன்றாக சேர்ந்து இப்புனித தினத்தைக் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சிலர் பெர்னாமா செய்திகளுடன் பகிர்ந்துகொண்டனர்.

சிறப்பு அலங்காரங்கள், வண்ண வண்ண விளக்குகள், வித விதமான நட்சத்திரங்கள், குழந்தை இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் அடையாளங்கள், திரளான மக்கள் கூட்டத்தார் என்று தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் திருப்பலியை மெருகேற்றியது.

இதனிடையே, பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உள்ள புனித செயின்ட் அன்னை தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களின் ஒன்றுகூடி கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமைவாய்ந்த இந்த தேவாலயத்தில் காலை தொடங்கியே, கிறிஸ்தவர்களுடன் பல்வேறு இனத்தவர்களும் கூடியிருந்ததை காணமுடிந்தது.

புத்தாடைகள் அணிந்து, குடும்ப உறுப்பினர்களுடன் தேவாலயத்திற்கு வந்தவர்கள் பழைய தேவாலய கட்டிடம் முன்பு புகைப்படங்களை எடுக்கும் வாய்ப்பையும்த் தவறவிடவில்லை.

Source : Bernama

#Christmas
#ChristmasInMalaysia
#Rawang
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia