ஜோகூரில் மீண்டும் சனி ஞாயிறுகளில் வார இறுதி விடுமுறை

ஜோகூரில் மீண்டும் சனி ஞாயிறுகளில் வார இறுதி விடுமுறை

ஜோகூர், 07/10/2024 : அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஜோகூர் மாநிலத்திற்கான வார இறுதி விடுமுறை மீண்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முடிவை பல்வேறு கோணங்களிலும் அம்சத்திலும் ஆராயுமாறு இடைக்கால ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில், மாநில மந்திரி புசார், டத்தோஸ்ரீ ஓன் ஹபிஸ் காஸிக்கு அறிவுறுத்தினார்.

மாட்சிமை தாங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் ஒப்புதலையும் ஜோகூர் மாநில இஸ்லாமிய மதத் துறை, ஜே.ஏ.ஐ.என்.ஜே கருத்துகளையும் பெற்ற பிறகே இந்த முடிவு அறிவிக்கப்பட்டதாக ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் கூறினார்.

இந்த முடிவின் வழி, அனைத்து தனியார் நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் அது தொடர்புடைய தரப்பினருடன் பணிபுரியும் இஸ்லாமிய தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமையன்று தங்களது தொழுகையை நிறைவேற்ற போதுமான வாய்ப்பு வழங்க முடியும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஜோகூர், அதன் வார இறுதி விடுமுறை நாள்களை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளுக்கு மாற்றியது.

அப்போது மாநில சுல்தானாக இருந்த சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 23-இல் அதனை அறிவித்திருந்த நிலையில், 2014-தொடங்கி அது அமல்படுத்தப்பட்டது.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia