பாயா ஜெராஸ் வட்டார மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பேங்க் ரக்யாட் அறவாரியம் உதவித் தொகை வழங்கியது

பாயா ஜெராஸ் வட்டார மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பேங்க் ரக்யாட் அறவாரியம் உதவித் தொகை வழங்கியது

சுங்கை பூலோ, 05/10/2024 : 2024ஆம் ஆண்டின் பள்ளி தவணையில் சுங்கை பூலோவின் பாயா ஜராஸ் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பேங்க் ரக்யாட் அறவாரியம் உதவித் தொகை வழங்கியது.

அங்குள்ள மாணவர்களின் கல்வி கட்டண சுமையைக் குறைப்பதோடு, சுற்றுவட்டார பள்ளிகள் மற்றும் உயர்கல்வி கழங்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

சுங்கை பூலோ பண்டார் பாருவில், உள்ள MBSA மெராந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளிகள், உயர்கல்வி கழகங்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

கல்வி மேம்பாடு உட்பட மாணவர்களின் சாதனைகளுக்கான திட்டங்களை வழிவகுக்க இந்த உதவி தொகை, பள்ளிகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறிய டத்தோஶ்ரீ ரமணன், சமூக-பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான இதுபோன்ற முயற்சிகளைத் தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

”இது ஐந்தாவது நிகழ்ச்சி சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில். 3 லட்சத்து 93 ஆயிரம் இவர்கள் கொடுத்துள்ளனர். ஆக, மாணவர்களின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. இந்த முயற்சிக்கு பேங்க் ரக்யாட் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சுங்கை பூலோ மட்டுமல்ல மாறாக நாடு முழுவதும் கொடுக்கின்றனர்”, என்று அவர் கூறினார்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் ஒத்துழைப்போடு பேங்க் ரக்யாட் அறவாரியம் வழங்கிய உதவி திட்டத்தில் பாயா ஜராஸ் வட்டாரத்தில் உள்ள 7 இடைநிலைப்பள்ளிகளுக்கு 70 ஆயிரம் ரிங்கிட் Tuisyen Rakyat உதவி தொகை வழங்கப்பட்ட வேளையில், 8 தேசிய பள்ளிகளுக்கு 40 ஆயிரம் ரிங்கிட் கொடுக்கப்பட்டது.

அதோடு, 500 மாணவர்களோடு, 51 உயர்கல்வி கூட மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

”இந்த பணத்தை வைத்து நான் என்னோட கணினி வகுப்பு கட்டணத்தைக் கட்டுவேன். இந்த பணத்தைக் கொடுத்ததற்கு டத்தோ ரமணனுக்கு மிகவும் நன்றி”, என்று மாணவி ஹஷ்வித்தா ஜகநாதன் கூறினார்.

”இந்த நன்கொடை கொடுத்த டத்தோவிற்கு நன்றி. இந்த பணத்தை அவர்கள் சிறிய பணமாக கொடுத்தாலும் எங்களுக்கு இது ஒரு பெரிய தொகையாக தோன்றுது. ஆக, இந்த பணத்தை வைத்து நாங்கள் படிப்பிற்குத் தேவையான பொருட்களை வாங்கிப்போம்”, என்றார் மாணவன் இவான் ஜெராமில் விஜெ மனுவேலன்.

மேலும், பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவி தங்களின் குடும்ப சுமையைக் குறைப்பதற்கு பெரிதும் துணைச் செய்வதாக பெற்றோர்கள் சிலர் கூறினர்.

”முடிந்த அளவிற்கு நாங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்குப் பயனாக இருக்கிறது. அதனால் நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம். இந்த மாதிரி சின்ன சின்ன உதவிகள் கிடைப்பதனால எங்களுக்கும் சுலபமாக இருக்கிறது”, என்று கூறினார் சுபாஷினி சந்திரசேகரன்.

செப்டம்பர் மாதம் வரையில், 65 இடங்களை உள்ளடக்கி பேங்க் ரக்யாட் அறவாரியம் வழங்கிய 29 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 24,306 மாணவர்கள் மற்றும் 226 பள்ளிகள் பயன் அடைந்துள்ளன.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia