2040ஆம் ஆண்டுக்குள் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்த்தப்படும் – சுகாதாரத்துறை அமைச்சர்

2040ஆம் ஆண்டுக்குள் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்த்தப்படும் - சுகாதாரத்துறை  அமைச்சர்

புத்ராஜெயா, 05/10/2024 : மலேசியாவின் புற்றுநோய் சிகிச்சை முறையை வலுப்படுத்தும் முயற்சியாக 2040-ஆம் ஆண்டிற்குள் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கையை 400-ஆக உயர்த்துவதற்கு சுகாதார அமைச்சு எண்ணம் கொண்டுள்ளது.

நாட்டில் தற்போது மொத்தமாகவே, 175 புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்கள் இருக்கும் வேளையில், அவர்களில் 80 பேர் அரசாங்கத் துறையிலும் இதர 95 பேர் தனியார் துறையிலும் பணியாற்றி வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

‘நடுநிலையாக இவ்விவகாரத்தை நாம் கருத்தில் கொள்வோமானால், உதாரணத்திற்கு, கதிரியக்கவியல் தலைமைக் கல்லூரியிலிருந்து மட்டும் ஒரு தவணைக்கு 20 பேர் வரை தேர்ந்தெடுக்கலாம் என்று நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். அதுமட்டும் கிடைத்தால் அதில் முழுமையாக கவனம் செலுத்தும் உரிய நடவடிக்கைகளை எடுப்போம். 2040-ஆம் ஆண்டுக்குள் 400 பேரை நியமிப்பதே எங்கள் இலக்கு’, என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் உள்ள தேசிய புற்றுநோய் கழகத்தில், 2024 Pink Oktober எனும் உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

நாட்டிலுள்ள பெரும்பாலான புற்றுநோயாளிகள் மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்தில், அதாவது, அக்கிருமி உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவிய பின்னரே அந்நோய் குறித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதாக டாக்டர் சுல்கிப்ளி கூறினார்.

இது அவர்களின் சிகிச்சை முறையைக் கடுமையாக்குவதுடன், செலவுகளையும் அதிகரிக்கின்றது.

அதன் பொருட்டு, புற்றுநோய் சிகிச்சைகளுக்கான அணுகல் முறையை அரசாங்கம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாகவும் அவர் விவரித்தார்.

Source : Bernama

#CancerTreatment
#PinkOctober2024
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia