கோலாலம்பூர், 05/10/2024 : வரும் அக்டோபர் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பணவீக்கம் தொடர்பான விவகாரத்திற்கு மடானி அரசாங்கம் கவனம் செலுத்தும்.
இவ்வட்டாரத்தில் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சமையல் எண்ணெய், பெட்ரோல் மற்றும் மாவு போன்ற பொருள்களின் விலைகள் மலேசியாவில் மலிவாக இருந்தாலும் வருமானத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
”வருமானம் உயரவில்லை. உதாரணமாக, உற்பத்தி அல்லது முதலீடுகளில் அதிகரிப்பு. இந்தப் பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும். அரசாங்க துறைக்காக நான் என்ன செய்தேன். உதாரணத்திற்கு, அவர்களில் 14 லட்சம் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தினேன். இது கடந்த 12 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டது”, என்று அவர் கூறினார்.
கோலாலம்பூரில், இன்று CNBC உடனான நேர்காணலின்போது பிரதமர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, அமெரிக்க டாலருக்கு ஈடான உயர்வை அண்மையில் பதிவு செய்து தென்கிழக்கு ஆசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக ரிங்கிட் விளங்கினாலும், அதன் முழுமையான மதிப்பு இன்னும் எட்டப்படவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
”4.10-ஆக இருதாலும் இது இன்னும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. 3.80-ஆக இருந்ததை மக்கள் அறிவர். ஆனால், அதனால்தான் அது படிப்படியாக உயர்கிறது. நாம் தலையிட வழி இல்லை. சந்தையின் ஆற்றல் நிர்ணயிக்கட்டும். அது நமது சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் விதத்தில் நம்பிக்கையையும் நமது கொள்கைகளையும் பிரதிபலிக்கிறது”, என்று அவர் தெரிவித்தார்.
அதோடு, ரிங்கிட்டின் நிலையான மதிப்பு ஏற்றுமதியாளருக்குக் கவலையை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் அது இன்னும் குறைவாக மதிப்பிடப்படும் நிலையில் பெரியளவில் கவலைகொள்ள அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.
Source : Bernama
#Anwar
#Budget2025
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia