கோலாலம்பூர், 05/10/2024 : PPSMI எனும் மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் கீழ், 2024ஆம் ஆண்டில் 11 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா 9 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 75 ரிங்கிட் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் உள்ள இந்தியர்களின் சமூக பொருளாதாரத்தை மேப்படுத்தும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து திட்டங்களும் அமலில் உள்ளதாக மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு அரசாங்கம் மித்ராவிற்கு ஒதுக்கீடு செய்த 10 கோடி ரிங்கிட்டை முழுமையாக அமல்படுத்தும் பொருட்டு, எஞ்சிய ஒதுக்கீட்டு நிதியான 45 லட்சத்து 17 ஆயிரத்து 925 ரிங்கிட்டை பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் செயல்படுத்த மித்ரா திட்டமிட்டுள்ளதாக பிரபாகரன் கூறினார்.
இதனிடையே, பயனுள்ள நோக்கத்திற்காக மித்ராவின் நிதியை பெறுவதற்கு அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள், இம்மாதம் 15 தொடங்கி நவம்பர் 14ஆம் தேதிவரை அதன் அகப்பக்கத்தின் வழி விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.
”அதுக்கான நோக்கம் மித்ராவில் நாங்கள் வழங்குவோம். விண்ணப்பம் செய்யும் போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது மாநிலத்தில் விண்ணப்பம் செய்தால் எங்களுக்கும் வசதியாக இருக்கும். ஒரு அரசு சார்பற்ற நிறுவனங்கள் இதர மாநிலங்களில் விண்ணப்பித்தால் சிரமமாக இருக்கும். அதோடு, அரசு சார்பற்ற நிறுவனங்கள் பயிற்சி திட்டங்களைச் செய்ய கடினமாக இருக்கும். ஏனென்றால், ஒழுங்குமுறைகள் கடுமையாக்கியுள்ளோம்,” என்றார் அவர்.
நேற்று கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் நடைபெற்ற மலேசிய தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத்துடனான சந்திப்பிற்குப் பின்னர் பிரபாகரன் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
Source : Bernama
#MITRA
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia