அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை 2024 / 2025 வடகிழக்குப் பருவமழை தொடரும்

அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை 2024 / 2025 வடகிழக்குப் பருவமழை தொடரும்

புத்ராஜெயா, 03/10/2024 : இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையில் 2024 / 2025 வடகிழக்குப் பருவமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்காலகட்டத்தில் நான்கு முதல் ஆறு முறை வரை தொடர் மழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரையில், கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியாவின் துணை இயக்குநர் அம்புன் டின்டாங் தெரிவித்தார்.

இவ்வாண்டு டிசம்பர் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ஜோகூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் அடைமழைப் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபகற்ப மலேசியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் சபாவின் கிழக்கில் உள்ள சில பகுதிகளைத் தவிர, பெரும்பாலான இடங்களில் சராசரி மாத மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வடகிழக்கு பருவமழையான MTL-இன் தொடக்கக் கட்டத்தில் சராசரிக்கு சற்று அதிகமாகவே மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அம்புன் டின்டாங் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு தேசிய காலநிலை கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, MTL நிறைவடையும்போது, அதாவது அடுத்தாண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் தீபகற்ப மலேசியாவின் வடப் பகுதியில் உள்ள பெர்லிஸ், கெடா, பினாங்கு, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் மழைக் குறைவதோடு வறண்ட வானிலையும் நிலவும் என்று நம்பப்படுகிறது.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.