லாஹாட் டத்து முற்றுகை: குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நிலைநிறுத்தம்

லாஹாட் டத்து முற்றுகை: குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நிலைநிறுத்தம்

புத்ராஜெயா, 02/10/2024 : 11 ஆண்டுகளுக்கு முன்னர், லாஹாட் டத்துவில் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு எதிராக போரைத் தொடங்கிய, சுலு சுல்தான் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஜமாலுல் கிராமின் மருமகன் உட்பட ஏழு பிலிப்பைன்ஸ் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையைக் கூட்டரசு நீதிமன்றம், இன்று நிலைநிறுத்தியது.

அந்த எழுவர் சமர்ப்பித்த சீராய்வு மனுவைத் தேசிய தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதி குழு, ஒருமனதாக நிராகரித்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், டான் ஶ்ரீ அமார் அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாசிம் மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ நோர்டின் ஹசான் ஆகியோருடன் இணைந்து கலந்தாலோசித்த பின்னர், அனைத்து விண்ணப்பதாரர்களின் மனுவையும் நிராகரித்து, மரணத் தண்டனை நிலைநிறுத்தப்பட்டதாக முடிவெடுக்கப்பட்டதாக தெங்கு மைமுன் தெரிவித்தார்.

2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 10 மற்றும் ஏப்ரல் 10-ஆம் தேதி, லாஹாட் டத்து, கம்போங் தன்டோவில் ஆயுதமேந்தி முற்றுகையிட்ட சம்பவத்தில் அக்கும்பலுடன் நடத்தப்பட்ட மோதலில், மலேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.

குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 121-இன் கீழ் அக்குற்றத்தைப் புரிந்தது நிரூபிக்கப்பட்டதால் அனைத்து நபர்களுக்கும், 2016-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இருப்பினும், 2017-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி, ஆயுள் தண்டனையை மரணத் தண்டனைக்கு மாற்றும்படி அரசு தரப்பு மேல்முறையீட்டை அனுமதித்து, அவர்களுக்கு அத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்தது.

2018-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றமும், மரணத் தண்டனையை நிலைநிறுத்தியது.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.