இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா; காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வாகை சூடியது

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா; காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வாகை சூடியது

கோலாலம்பூர், 30/09/2024 : தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல்சார் சிந்தனையையும் திறனையும் மேம்படுத்தும் நோக்கத்தில் அஸ்தி எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கம், 18-ஆவது ஆண்டாக இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவைச் சிறப்பாக நடத்தியது.

பல்வேறு தொழில்நுட்ப உத்திகள் மற்றும் அறிவியல் சவால்களை உட்படுத்தி நடைபெற்ற தேசிய அளவிலான இப்போட்டியில் பூச்சோங், காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வாகை சூடியது.

கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கி இவ்விழாவைப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அஸ்தி ஏற்று நடத்தி வருகிறது.

கோலாலம்பூர் இம்பி மாநாட்டு மையத்தில், 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற இவ்விழாவில் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்து 70 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவர்கள் தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு சென்றதாக, அஸ்தி தலைவர் முனைவர் முஹமட் யூனுஸ் யாசின் தெரிவித்தார்.

”பதினெட்டு வருஷமா இந்த நிகழ்வு நம்ப நடத்தி வருகிறோம். இந்த அறிவியல் விழாவின் முக்கியமான நோக்கம் என்னவென்றால் பிள்ளைகளுக்கு அறிவியல் சார்ந்த நுட்பங்களைக் கொண்டு சேர்க்க இதை 2007-ஆம் ஆண்டில் ஆரம்பிச்சோம். அதோடு, பிள்ளைகள் தன்னம்பிக்கையோடு பேச வேண்டும். ஒரு விஷயம் அவர்களுக்குத் தெரிந்து விட்டால், அதை பற்றி பேசும் போது ஒரு தன்னம்பிக்கை ஏற்படும்”, என்று அவர் கூறினார்.

நடுவர் குழு வழங்கிய 10 தலைப்புகளிலிருந்து ஒரு தலைப்பைத் தேர்வு செய்து, அறிவியல் செயற்பாங்கு திறன்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

அதில், மாணவர்களின் அறிவியல் ஆற்றலைப் பரிசோதிக்கும் விதமாக, அவர்களுக்கு நேரடி கைமுறை தேர்வு நடத்தப்பட்டதாக, இவ்விழாவிற்கான இயக்குநர் சுபாஷ் கிருஷ்ணன் கூறினார்.

2 மற்றும் 3-ஆம் நிலை வெற்றியாளர்களுக்குத் தங்க பதக்கத்தோடு, 1500 ரிங்கிட் வழங்கப்பட்ட வேளையில், முதல் நிலை வெற்றியாளர்கள் பிளாட்டினம் பதக்கத்தை வென்றதுடன், 2500 ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றுள்ளனர்.

4, 5 மற்றும் 6-ஆம் நிலை வெற்றியாளர்களுக்கு வெள்ளி பதக்கமும் 1000 ரிங்கிட் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.

இதனிடையே, 7,8,9 மற்றும் 10-ஆம் நிலையில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு வெண்கல பதக்கமும், 700 ரிங்கிட் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.

Source : Bernama

#SJKTCastlefield
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.