புத்ரா ஜெயா, 27/09/2024 : மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டில், குறிப்பாக கல்வி, சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் கவனம் வைத்து பல செயல்திட்டங்களைத் தீட்டி வரும் சிறந்த தலைவராவார். அவரது இந்தச் சீரிய எண்ணம் இதுவரை அவர் செயல்படுத்தி வந்துள்ள திட்டங்கள் மற்றும் தொடர்ந்து திட்டமிட்டுச் செயல்படும் பாங்கு ஆகியவற்றின் வாயிலாக நன்கு வெளிப்படுகிறது.
24 செப்டம்பர் 2024 அன்று, மாண்புமிகு பிரதமர் தமது அலுவலகத்தில் மேலவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கூடி இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து ஆராயும் மிக முக்கிய கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில், மாண்புமிகு பிரதமர் சிலாங்கூருக்கு ஒன்று, ஜொகூர் மாநிலத்துக்கு இரண்டு, நெகிரி செம்பிலானுக்கு ஒன்று, கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களுக்கு முறையே ஒவ்வொன்று என ஆறு மின்சுடலைகளை நிர்மாணிக்க RM 2 கோடி நிதியை அறிவித்தார். இன்னும் இரண்டு மின்சுடலைகளுக்கான நிர்மாணிப்பு குறித்து சில தகவல்கள் ஆராயப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும். இது இந்திய மக்களின் சமூக தேவைகளை நிறைவு செய்யும் மற்றும் அவர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் பிரதமரின் போக்கை நன்கு பறைசாற்றுகிறது. இதனோடு இந்திய மக்களின் நலனுக்காக இன்னும் சில திட்டங்களும் இக்கூட்டத்தில் பேசப்பட்டன.
கல்வி முக்கிய முன்னெடுப்பாக கொள்ளப்படும்
இடைக்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைக் களைவதில் மட்டும் கவனம் செலுத்தாது, மலேசிய இந்தியர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் பொருட்டு நீண்ட காலத் திட்டங்களையும் ஏற்படுத்துவதில் பிரதமர் முனைப்புடன் செயல்படுபவராவார். அதன் அடிப்படையில் கல்வி தொடர்ந்து மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் அதிமுக்கிய முன்னெடுப்பாக விளங்குகிறது. இக்கூட்டத்தில் கல்வித் துறையிலிருந்து விடுபட்டுப் போகும் மாணவர்களின் நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர், வந்திருந்த தலைவர்களுடன் இணைந்து அவற்றைக் களையும் வழிவகைகள் குறித்து அலசி ஆராய்வதிலும் முனைப்பு காட்டினார். தொடர்ந்து கல்வி பயிலாமல் விடுபட்டு போகும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க TVET கல்வியை (தொழில்திறன் பயிற்சி) ஒரு சிறந்த மாற்றாக பிரதமர் முன்னிலைப்படுத்தினார், இத்தொழில் திறனைக் கைவரப்பெறுவதன் வழி எதிர்காலத்தில் அம்மாணவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமையும். மாண்புமிகு துளசி மனோகரன், மாண்புமிகு குலசேகரன், மாண்புமிகு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் மாண்புமிகு கோபிந் சிங் டியோ ஆகியோரும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களது கருத்துகளை வழங்கியிருப்பதானது இந்திய மக்களுக்கு நன்மையான முடிவுகளை எடுப்பதில் முனைப்பாக இருப்பதை வெளிக்காட்டுகிறது.
மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் கட்டடம் கட்டப்படுவதற்காக RM 3 கோடி நிதியை அறிவித்திருந்ததும், 2012-ஆம் ஆண்டு சிறப்புச் செயல்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட வேண்டிய நிர்மாணிப்புப் பணிகள் நீண்ட காலம் தடைபட்டுப் போன ஆறு பள்ளிகளின் நிர்மாணிப்புப் பணிகளையும் நிறைவு செய்திருப்பதானது தமிழ்ப்பள்ளிகளின் மீது பிரதமர் கொண்டிருக்கும் அக்கறையை நன்கு வெளிப்படுத்துகிறது. எதிர்வரும் 6 அக்டோபர் அன்று, சிறந்த தளவாடங்களை உடைய அதிநவீன அரசாங்கத் தமிழ்ப்பள்ளியாக விளங்கப்போகும் ஹீவூட் தமிழ்ப்பள்ளி திறப்பு விழா காணவிருக்கிறது. இந்தப் பள்ளியின் நிர்மாணிப்பானது, நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் சிக்கல்கலையும் களைந்து நம் இந்திய சமுதாயத்தின் இளம் மாணவர்களுக்குக் கண் போன்ற சிறந்த கல்வி வாய்ப்பை வழங்குவதில் பிரதமர் கொண்டுள்ள கடப்பாட்டுக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
இந்திய பண்பாட்டைக் காப்பதில் கடப்பாடு
நமது பிரதமர், இந்தியர்களின் பண்பாடு தொடர்ந்து பேணப்படுவதில் மிகுந்த கடப்பாடு உடையவராவார். மலேசிய இந்து சங்கம் நாடளாவிய நிலையில் நடத்திய திருமுறைப் போட்டிகளுக்கு RM230,000 நிதி வழங்கியிருப்பதானது இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இது மலேசிய இந்தியர்கள் தங்களது பண்பாடு மற்றும் பண்புநலன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான ஒரு சிறந்த முன்னெடுப்பாகும். இதற்கு அடுத்த நிலையில் பார்க்கும்போது, தமிழ் இலக்கியங்களை வளர்ப்பதற்காக மலாயப் பல்கலைக்கழகத்திற்கு RM 2 மில்லியன் நிதியும், தாய்மொழிக் கல்வியைத் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்ய மலேசிய கல்வி அமைச்சுக்கு RM 2 மில்லியன் நிதியும் வழங்கியிருப்பதானது பிரதமரின் மிக சிறந்த செயலாகும். இம்முன்னெடுப்புகள் யாவும் இந்திய சமுதாயத்தின் மீதான பிரதமரின் கடப்பாட்டையும் இந்தியர்களின் பண்பாடு மற்றும் மொழியைக் காப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையையும் பறைசாற்றுகின்றது.
இருப்பினும், அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகவும் அரசு நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும். “எனது அலுவலகத்திலேயே மூன்று அதிகாரிகள் இருக்கின்றனர், பிரதமரின் அலுவலகத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது போதிய அளவில் பணியாளர்கள் இருக்கின்றனர். குறிப்பாக என்னையும் கூட, இந்திய மக்களின் விவகாரங்களைக் கண்காணிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக பிரதமர் பணியமர்த்தியிருக்கிறார். இந்திய மக்களின் விவகாரங்களைக் கவனிக்கவும், அவர்களின் வளர்ச்சிக்கான இடைவெளியைக் குறைக்கவும், இந்தியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களையவும் சிறப்பாக அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்” என மாண்புமிகு பிரதமரின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி திரு சண்முகம் மூக்கன் அவர்கள் தெளிவுபடுத்தினார். மேலும், “ஹின்ராஃப் காலம் முதல் இன்றுவரை நான் பிரதமருடன் பயணித்து வருவதில் எனது மதம் மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளுக்கு என்றுமே அவர் மதிப்பளித்து ஆதரவாகவே இருந்து வந்திருக்கின்றார். நான் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதாலோ அல்லது அவருடனேயே இருந்து செயல்படுவதாலோ எனது பண்பாடு சார்ந்த விஷயங்களை மாற்றச்சொல்லி ஒரு முறையேனும் அவர் நிர்பந்தம் செய்ததே கிடையாது”.
தீபாவளியை முன்னிட்டு உதவிகள்
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், நாடளாவிய நிலையில், தேவைப்படும் குடும்பங்களுக்காக உணவுக் கூடைகளை வழங்க பிரதமர் அவர்கள் RM 1.5 மில்லியன் நிதியை வழங்கியிருக்கிறார். எந்தவொரு இனமும், குறிப்பாக கூடுதல் உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் அவர்களது முக்கியப் பெருநாள்களை மகிழ்ச்சியாகக் கொண்டாட வழி இல்லாது போவதைத் தவிர்க்க பிரதமர் கைகொள்ளும் ஒரு உன்னத வழிவகை இதுவாகும். இந்த உணவுக் கூடைகள் வழங்கப்படுவதன் வாயிலாக அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதே வேளையில் மக்களின் தேவைகள் குறித்து அரசாங்கம் விழிப்பாக இருப்பதைக் காட்டும், குறிப்பாக பெருநாள் காலங்களில் கூடுதல் உதவிகள் வழங்கும் அரசாங்கத்தின் அரவணைப்பு மக்களுக்கு என்றுமே உண்டு என்பதையும் இதுபோன்ற முன்னெடுப்புகள் பறைசாற்றுகின்றன.
இவ்வாறு பல முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்துவரும், தொடர்ந்த கடப்பாட்டைக் காட்டிவரும் மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் செயல் இந்திய மக்களின் வளர்ச்சியில் அரசாங்கம் காட்டும் மிகுந்த அக்கறையையும் ஒருபோதும் அவர்கள் நாடு காணும் வளர்ச்சியிலிருந்து விடுபட்டுவிடாமல் இருப்பதையும் உறுதி செய்கின்றது என்பதற்குச் சான்றாக அமைகிறது” என மாண்புமிகு பிரதமரின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி திரு சண்முகம் மூக்கன் அவர்கள் விளக்கப்படுத்தினார்.
#Anwar
#Malaysia
#MalaysiaNews
#LatestNews
#Entamizh