நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை – பிரதமர்

நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை - பிரதமர்

புத்ரா ஜெயா, 25/09/2024 : நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்தியர்களுக்கான கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து முக்கிய அம்சங்களும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 

24/09/2024 அன்று இந்தியர்களைப் பிரதிநிதிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் இந்த உறுதியை வழங்கினார்.

அதேசமயம், அனைத்து இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவமும் இச்சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உணவுக்கூடை அன்பளிப்புக்காக சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கெடா, ஜொகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களில் இந்து மயானம் அல்லது இடுகாடுகள் நிர்மாணிப்பதற்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய சமூகத்தின் நலனை உறுதி செய்யும் வகையில், எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், முந்தைய வரவுசெலவுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில திட்டங்கள் தொடரப்படவுள்ளன.

முன்னதாக, அரசாங்கம் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கு (MITRA) குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. மேலும், தேசிய தொழில்முனைவோர்களுக்கான பொருளாதார நிதி (TEKUN), அமானா இக்தியார் மலேசியா ஆகியவற்றின் வழி, இந்திய சமூகத்திற்காக சில நிதிகளையும் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், எதிர்காலத்தில் நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலை தொடர்ந்து உயர்த்தப்படும் என்று தான் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

#MalaysiaMADANI
#MalaysiaNews
#LatestNews
#Anwar
#Malaysia