ஜாலூர் கெமிலாங்கை இறக்கி சபா, சரவாக் கொடிகளை ஏற்றிய விவகாரம் விசாரிக்கப்படுகிறது

ஜாலூர் கெமிலாங்கை இறக்கி சபா, சரவாக் கொடிகளை ஏற்றிய விவகாரம் விசாரிக்கப்படுகிறது

ஜாலான் செமாராக், 24/09/2024 :  சபா, சரவாக் கொடிகளை ஏற்றுவதற்கு முன்பு ஜாலூர் கெமிலாங்கை இறக்கும் காணொளி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் உட்பட 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் அரச மலேசிய போலீஸ் படை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி ஆஸ்திரேலியா, மெல்போர்ன்னில் அச்சம்பவம் நிகழ்ந்தது, தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன்  தெரிவித்தார்.

அவ்விரு மாநிலங்களில் மலேசியாவின் காலணித்துவ ஆட்சிக்கான முடிவு என்றும், அவற்றை குடியரசுகளாக மாற்றும் நடவடிக்கை என்று கூறும் வகையிலும் அக்காணொளி அமைந்திருந்தது.

”இதுவரை 35 போலீஸ் புகார்கள் கிடைத்துள்ளன. சபாவில் 34 போலீஸ் புகார்களும் கோலாலம்பூரில் ஒரு புகாரும் செய்யப்பட்டுள்ளன”, என்று அவர் கூறினார்.

நேற்று, கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

அக்காணொளி சபாவில் வசிக்கும் நபர் ஒருவரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து பகிரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு, அந்நபருக்கு ஏற்கனவே, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 500-இன் கீழும், 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 233-இன் கீழும் குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக ரசாருடின் விவரித்தார்.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysiaLatestNews
#LatestNews
#Malaysia