கோலாலம்பூர்,27/08/2024 : கடந்த ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வில் மூழ்கி விழுந்த இந்திய குடிமகள் விஜய லட்சுமி கலியைக் கண்டுபிடிக்க மலேசிய அதிகாரிகள் தங்கள் தேடலைத் தொடர்கின்றனர். காணாமல் போன இந்திய மாதுவை மீட்பதற்காக நீர்ப்பாதையில் உள்ள பல்வேறு மேன்ஹோல் பகுதிகளில் இப்போது ‘ஃப்ளஷிங்’ முறையைப் பயன்படுத்துகின்றனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை அவ்வப்போது சந்திப்பதும் தொடர்கிறது. இந்திய தூத்ஜரக அதிகாரிகள், காணாமல் போன இந்திய பெண்ணின் கணவர் மற்றும் மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். காவல்துறை மற்றும் மலேசிய குடிவரவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தூதரகம் அவர்களின் சுற்றுலா விசாக்களை நீட்டித்துள்ளது, அவர்கள் மலேசியாவில் தங்குவதற்கு வசதிகளும் செய்துத் தரப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய உயர் ஆணையர் பி.என்.ரெட்டி ,விஜயலட்சுமியின் கணவர்,மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து, தேடல் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான செயல்பாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் விபரங்களை விளக்கினார். மேலும் அனைத்து விஷயங்களிலும் ஆதரவை வழங்குவதாக குடும்பத்தினருக்கு உறுதியளித்தார். தேடுதல் பணி ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தூதரக அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்கள்.