கோத்தா கினபாலு, ஆக.21:
இந்து சமயத்தின் இறைநேசப் பயணத்தில் ஒரு மனிதன் வாழும் காலத்தில் எந்த அளவுக்கு சாத்திர-சம்பிரதாய-சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறாதோ அந்த அளவிற்கு மனிதன் இறந்த பின்னும் சடங்குகள் பலவகையாலும் நிறைவேற்றப்படுகின்றன.
ஒரு மனிதனின் பிறவிப் பயன், அடுத்தப் பிறவியிலும் பிரதிபலிக்கும் என்பதாலும் மனிதனின் உடலைவிட்டு ஆன்மா பிரிந்தாலும் அந்த ஆன்மாவின் பயணம் பரம்பொருளுடன் ஐக்கியம் ஆகும்வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது இந்து தருமக் கொள்கை.
அதன் அடிப்படையில் போர்னியோ மண்டலத்தின் சபா மாநிலம், கோத்தா கினபாலு நகரில் இந்து சமய நல்லடக்க சடங்கிற்கான பயிற்சி வெகு அண்மையில் நடைபெற்றது.
மலேசிய இந்து சங்க சபா மாநிலக் கிளை சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு, சபா மாநில தொழில்முனைவோர்-கூட்டுறவு மேம்பாட்டுது துறை ஏற்பாட்டு ஆதரவு வழங்கியது.
சபா பசுபதி நாதர் ஆலய நிருவாகத்தினரின் ஒத்துழைப்புடன் கோத்தா கினபாலு அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் ஈமச் சடங்கு அல்லது நீத்தார் கடனுக்கான பயிற்சிப் பட்டறை நடைப்பெற்றது. மனிதன் இறந்தபின், உடலை எரியூட்டுவதற்கு அல்லது நல்லடக்கம் செய்வதற்குமுன், நடத்த வேண்டிய இந்தச் சடங்கு, இந்து சமய அடிப்படையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான பயிற்சியை, இந்து சங்க நெகிரி செம்பிலான மாநிலத் தலைவரும் சிவாச்சாரியாருமான டாக்டர் ஆனந்த கோபி நிறைவேற்றினார்.
ஈமச் சடங்கை நிறைவேற்றுவோர் மட்டுமன்றி, இன்றைய இளம் தலைமுறையினரும் இதைப்பற்றி தெளிவுபெற வேண்டும் என்பதன் நோக்கில், இந்து சங்க சபா மாநிலத் தலைவர் மருத்துவர் மாதவன், மாநில அளவில் அதிகமான இளைஞர்களை இந்தப் பயிற்சிப் பட்டறைக்காகத் திரட்டி இருந்தார்.
இறுதி நல்லடக்கச் சடங்கினை ஆளாளுக்கு விருப்பம்போல செய்யாமல், இந்து சமய, குறிப்பாக சைவ நெறிக்கு ஏற்ப இதை ஒருமுகமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை, சிவாச்சாரியார் ஆனந்த கோபி வலியுறுத்தினார். இதில், இந்திய-இந்து சமூக கலாச்சாரக் கூறுகளும் பாரம்பரியத் தன்மையும் விட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் தார்மிக கடமையாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சபாவில், ஈமச் சடங்கை நிறைவேற்றுபவர்களாக இரண்டு-மூன்று பேர்தான் உள்ளனர். அவர்களும் முதுமையை எட்டுவதால், இளைய தலைமுறையினர் இதை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்பதாலும், பொதுவாக தீபகற்ப மலேசியாவில் இருந்து கடல் கடந்து இங்கு சொற்ப அளவில் வாழும் இந்து இளைஞர்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதாலும் தேசியத் தலைவர் ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசனின் வழிகாட்டுதலின்படி இந்த சமய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக டத்தோ டாக்டர் கே.மாதவன் தெரிவித்தார்.
சண்டாகான், தாவாவ், லகாட் டத்து, கெனிங்காவ், லாபுவான் உட்பட சபா முழுவதிலுமிருந்து 40-க்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். குறிப்பாக, முனிஸ், வாணி, தீபா உள்ளிட்ட பங்கேற்பாளர்கள், இந்தப் பட்டறை மூலம் இறுதிச் சடங்கு குறித்த பல அம்சங்களைப் புரிந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.
கெம் கோக் காவி அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த மோகன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், சபாவில் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதால் இதுபோன்ற ஈமச் சடங்குகளில் பலவித குழப்பங்கள் நிலவுகின்றன. இருந்தாலும், முடிந்தவரை, இந்து சமய நெறிப்படி இந்தச் சடங்கை நிறைவேற்றி வருகிறோம். இந்தப் பட்டறை எங்களுக்கு மேலும் தெளிவையும் சரியான முறையையும் கற்றுத் தந்தது என்றார்.