இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கை -இந்து சங்கம் வரவேற்பு

இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கை -இந்து சங்கம் வரவேற்பு

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கை தொடங்கப்பட இருப்பதை அறிந்து மலேசிய இந்து சங்கம் பெரிதும் மகிழ்ச்சி அடையும் அதேவேளை, இதை பேரளவில் வரவேற்பதாக மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

மலேசிய மடானி அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இந்தியாவிற்கு 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டு கடந்த 19-ஆம் நாள் புதுடில்லி சென்றடைந்தார்.

இந்தச் சுழலில், இந்திய பிரதமர் நரேந்திர தாஸ் மோடியை சந்தித்து இரு நாடுகளுகளுக்கான பாரம்பரிய ராஜதந்திர உறவு, வர்த்தக மேம்பாடு குறித்தெல்லாம் கலந்துரையாடிய வேளையில், மலேசியாவின் முதல் பல்கலைக்கழமும் பன்னாட்டு அளவில் சிறந்து விளங்கும் உயர்க்கல்வி நிறுவனமுமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கையை நிறுவ வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி முன்வைத்த கோரிக்கையை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் உடனே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இது, மலேசியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்துக்களுக்கு பெரிதும் பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

மலேசிய இந்து சங்கம், திருமுறை வளர்ச்சியில் மட்டும் அக்கறை செலுத்தவில்லை. திருக்குறள் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டி வருகிறது; இதன் வெளிப்பாடாக கடந்த இரு வருடங்களாக, திருக்குறள் நூலை, நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் வழங்கிவரும் அரும்பணியை மலேசிய இந்து சங்கம் மேற்கொண்டு வருகிறது.

இப்பொழுது, கிட்டாதுகிட்டிய அரும்பேற்றைப் போல, நாட்டின் முதல் நிலை பல்கலக்கழகத்தில் திருக்குறள் நூலுக்கான தமிழிருக்கை அமைய இருக்கிறது. இதன்மூலம, திருக்குறள் இன்னும் பரவும்; பன்மொழி-பல்லினக் கூறுகளைக் கொண்ட மலேசிய கூட்டு சமுதாயத்தில் பரவலாக அனைத்து மக்களிடமும் திருக்குறள் சென்றடையும். அதைப்போல, திருவள்ளுவரின் பெருமையையும் உலகு நன்குஅறிய வாய்ப்பு ஏற்படும்.

இந்த நல்ல கோரிக்கையை முன்வைத்த இந்திய பிரதமர் மோடிக்கும் உடனே ஏற்றுக் கொண்ட மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் வாழ்த்தையும் பாராட்டையும் பதிவு செய்கிறோம் என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.