ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சி நுழைவு சீட்டில் குளறுபடி- நடந்தது என்ன?

ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சி நுழைவு சீட்டில் குளறுபடி- நடந்தது என்ன?

சிட்டி புரொடக்‌ஷன்ஸ் ஏற்பாட்டில் சமீபத்தில் மலேசியாவில் கோலாலம்பூரில் ஹிப் ஹாப் தமிழா வின் மேடை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் நுழைவுச் சீட்டு சம்பந்தமாக பல குளறுபடிகள் ஏற்பட்டது. சுமார் 2000 போலி நுழைவுச் சீட்டு அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. நிகழ்ச்சி அன்று இந்த 2000 போலி நுழைவுச் சீட்டு வாங்கியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடும் பிரச்சனையை சந்தித்துள்ளனர்.
ஜோகூர், சிங்கப்பூர், பினாங்கு என தூரத்தில் இருந்தெல்லாம் ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சியை நேரில் காண ரசிகர்கள் போலி நுழைவுச் சீட்டுகளை விலை கொடுத்து வாங்கி வந்திருந்தனர். அவர்களில் சுமார் 300 நபர்களுக்கு மட்டும் மாற்று ஏற்பாடு செய்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழிவகை செய்துள்ளனர். மீதமிருந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
MyTicket அதிகாரப்பூர்வ நுழைவுச் சீட்டு விற்பனையாளராக இருந்த போதிலும் பலர் Ticket2U பெயரில் போலி நுழைவுச் சீட்டை வைத்திருந்ததாக அறியப்படுகிறது. அசல் நுழைவுச்சீட்டு வைத்திருந்த சிலரும் இந்த நுழைவுச் சீட்டு மோசடியில் சிக்கி நிகழ்ச்சியில் நுழைய முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். சிலரது நுழைவுச் சீட்டில் இருந்த QR Code ஐ நகல் எடுத்து அதை பயன்படுத்தி போலி நுழைவுச்சீட்டு கொண்டு சிலர் முன்னரே நிகழ்ச்சிக்குள் நுழைந்துவிட்டதால், அசல் நுழைவுச்சீட்டு வைத்திருந்தவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இணையத்தில் இப்படி நுழைவுச்சீட்டு வாங்குபவர்கள் இனி QR Code தெரியும்படி எங்கும் தங்களின் நுழைவுச் சீட்டு பிரதிகளை புகைப்படம் எடுத்து பதிவது நல்லதல்ல என்பது இந்த நிகழ்ச்சியில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
டிக்டாக் முழுவதும் இந்த பிரச்சனை குறித்து நிறைய பதிவுகள் ஏற்பாட்டாளர்களை குறை கூறினாலும், யாரும் இந்த மோசடி குறித்து போலீசில் புகார் அளித்திருப்பதாக தெரியவில்லை. ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சிக்கு ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு விருந்தும் இந்த பிரச்சனை குறித்து விளக்கவும் சிட்டி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தார் பத்திரிக்கையாளர்களை 15/08/2024 அன்று சந்தித்து விளக்கங்களை கூறினர்.
சிட்டி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிட்டி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் திரு ரிஷி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. கோவிந்த் கலந்து கொண்டனர். இந்த இக்கட்டான நிலையை எப்படி அவர்கள் சமாளித்தார்கள் என்பதையும் இனி பொது மக்கள் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் கூறினர். இந்த போலி நுழைவுச்சீட்டு மோசடி குறித்து சிட்டி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
சிட்டி புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் அவர்களின் நிர்வாகத்திலும் பெரிய மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் பெரிய நிகழ்ச்சிகளில் இடர்பாடுகளை களைந்து சிறப்பாக அவற்றை நடத்திடுவோம் என்றும் உறுதி கூறினர்.

#CityProductions
#HipHopTamizha