நாடு முழுவதும் உள்ள தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளுக்கு விநியோகிக்க, ஒவ்வொரு மாநில பொது நூலகக் கழகத்திலும் உள்ள புத்தக வங்கிகளுக்கு தகுந்த புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தமிழ்ப் பள்ளிகளில் வாசிப்புப் பொருட்களை மேம்படுத்தவும், அதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று ஒற்றுமை துணை அமைச்சர் கே.சரஸ்வதி கூறினார்.
சிறு குழந்தைகளுக்கு அறிவை வளர்க்கும் எந்த ஒரு புத்தகத்தையும் நன்கொடையாக அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். உங்களின் அலமாரிகளில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் புத்தகங்களை குழந்தைகளுக்காகப் பகிருங்கள். பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பாக கொடுங்கள் என கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் இந்த புத்தகங்களிலிருந்து மாணவர்கள் அறிவைப் பெற உதவும்.
இன்று 11/08/2024 கெடாவில் நடைபெற்ற “என்னிடமிருந்து உங்களுக்கு திட்டம்” (Program Dariku Untukmu) மற்றும் புத்தகம் அன்பளிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் பதினாறு தமிழ்ப் பள்ளிகள் பங்குபற்றின.
கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி , முதல் புத்தக அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . சிலாங்கூரை சேர்ந்த 8 தமிழ்ப் பள்ளிகளுக்கும் கோலாலம்பூரை சேர்ந்த 3 தமிழ்ப் பள்ளிகளுக்கும் அந்த நிகழ்ச்சியில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
கெடாவில் இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கதைகள், கல்வி, மொழி மற்றும் இலக்கியம், சுய முன்னேற்றம் மற்றும் நற்சிந்தனைகள் அடங்கிய 3200 பிரதி புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன.