இந்தியை தொடர்ந்து தமிழில் சொந்தப் படம் தயாரிக்கிறார், ஏ.ஆர்.ரகுமான். இதுகுறித்து அவர் கூறியதாவது: பிசியான இசைப் பணிகளுக்கு இடையே, சொந்தப் பட நிறுவனம் சார்பில் இந்தியில் ஒரு படம் தயாரிக்கிறேன். அதற்கு நானே கதை எழுதியுள்ளேன். உலக வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் அனுபவங்கள், பயணங்களின்போது சந்திக்கும் மனிதர்கள், நாம் செல்லும் பாதைகள்தான் புதுப்புது கதைகள் பிறக்க காரணமாகிறது. என் சிந்தனையிலும் பல கதைகள் உருவானது. அதிலிருந்து ஒரு சிறந்த கதையை தேர்வு செய்து, அதை படமாக உருவாக்க முடிவு செய்துள்ளேன்.
படத்தின் இயக்குனர் தேர்வு முடிந்து விட்டது. விரைவில் அதை அறிவிப்பேன். 20 வயது நிரம்பிய ஒரு இளம் புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தியில் படம் உருவாக்குவதற்காக இந்தக் கதையை முதலில் தேர்வு செய்ததில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. அது தற்செயலாக அமைந்து விட்டது. இந்தியைத் தொடர்ந்து தமிழிலும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். முதற்கட்டமாக 2 படங்கள் தயாரிக்கிறேன். படம் இயக்குவது என்பது மிகப் பெரிய பொறுப்பு. அதனால், அந்த துறையில் ஈடுபடும் எண்ணம் இல்லை.