பெட்டாலிங் ஜெயா, 21 அக்டோபர் 2026 : மலேசிய இளம் தலைமுறையினரிடையே செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவையும் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், செல்காம் டிஜி பெர்ஹாட் (CelcomDigi Berhad), மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான RTM ஏற்பாடு செய்துள்ள ஜூனியர் இன்னோவேத்தான் 2026 நிகழ்ச்சியுடன் இணைந்து புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு கூட்டாளராகச் செயல்படும் செல்காம் டிஜி, நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்ற 200 தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படைப் பயிற்சியை வழங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது புதுமையான யோசனைகளை உருவாக்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவைப் பெறுவதுடன், நடைமுறை அனுபவத்தையும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயிற்சியைத் தொடர்ந்து, மாணவர்கள் செல்காம் டிஜியின் AI அனுபவ மையமான AiX-க்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நிஜ உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.


இதுகுறித்து செல்காம் டிஜியின் தற்காலிக தலைமைப் புத்தாக்க அதிகாரி குகன் திருநாவுக்கரசு கூறுகையில், இன்றைய இளம் தலைமுறையினர் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பங்களை அன்றாடப் பயன்பாட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல், அவற்றின் திறன்களையும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து, புதிய தீர்வுகளை உருவாக்கும் நம்பிக்கையை மாணவர்களிடம் வளர்ப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இளம் வயதிலேயே தொழில்நுட்ப ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம், மலேசியாவின் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவுத் திறனாளர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்களது புதுமையான யோசனைகளைச் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக மாற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், ஜூனியர் இன்னோவேத்தான் 2026 நிகழ்ச்சியில் ‘டெக் ஃபார் இம்பாக்ட்’ (Tech for Impact) விருதையும் செல்காம் டிஜி அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அல்லது சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து மாணவர்கள் சிந்திக்க இந்த விருது ஊக்கமளிக்கும்.
இவ்விருதுக்காக ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு இடைநிலைப்பள்ளியும் தேர்ந்தெடுக்கப்படும். வெற்றிபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கான 100 Mbps வேகமுடைய செல்காம் டிஜி எசென்ஷியல் 5G ஹோம் வைஃபை வசதி வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்த முடியும். மேலும், 2026 நவம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுத் தேர்விலும் செல்காம் டிஜி பங்கேற்கவுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஜூனியர் இன்னோவேத்தான் 2026, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த சவால்கள் மூலம் புதுமையான யோசனைகளை உருவாக்குவதற்கான தளமாக அமைந்துள்ளது. இப்போட்டியுடன் செல்காம் டிஜி இணைந்திருப்பது, மாணவர்கள் கற்றுக்கொள்ளும் தொழில்நுட்ப அறிவையும் நடைமுறைப் பயன்பாடுகளையும் ஒன்றிணைக்க உதவுகிறது.
மேலும், CD திட்டத்தின் மூலம் மலேசியாவின் அடுத்த தலைமுறை டிஜிட்டல் திறனாளர்களை உருவாக்கும் தனது நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்த முன்னெடுப்பை செல்காம் டிஜி மேற்கொண்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நேரடி அனுபவங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி, எதிர்கால செயற்கை நுண்ணறிவுத் துறைக்குத் தேவையான திறமையான இளைஞர்களை உருவாக்குவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.







