முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–
ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பிருந்து, ஏழைகளின் பசித் துன்பத்தைத் தாமும் அனுபவித்து, ஏழை எளியோருக்கு உணவு அளித்து, எல்லோரும் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனை தொழுது, ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
இஸ்லாமியப் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்ட உங்கள் அன்புச் சகோதரியின் அரசு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்கி வருவதையும்; பள்ளி வாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக புதிதாக வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதையும்; உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1000 ரூபாயாக உயர்த்தியும்; தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிருவாக மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளதையும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.