காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படுகின்றன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதன் கார ணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் அதிகரித்துள்ள நீர்வரத்தின் காரணமாக கடந்த 17ம் தேதி 47 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, நேற்று காலை 67.41 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 32,756 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் குடிநீருக்கு எடுக்கப்படுகிறது.
ஒகேனக்கல்லில் இருந்து பண்ணவாடி வழியாக மேட்டூர் அணைக்கு நீர் வந்தடைகிறது. நேற்று முன் தினம் மதியம் ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதை அருகில் காவிரி ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட ஒரு முதலை தண்ணீருக்கு மேலே வந்ததை சிலர் பார்த்துள்ளனர். தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், முதலைகள் தண்ணீரில் அடித்து வரப்படக்கூடும் என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில், நூற் றாண்டு பழமை வாய்ந்த ஜல கண்டேஸ்வரர் கோயிலும், அதன் நுழைவு வாயிலில் உள்ள நந்தி சிலையும் நீரில் மூழ்கின. பழமை வாய்ந்த கிறிஸ்தவ இரட்டை கோபுரத்தின் உச்சி பீடம் மூழ்கும் நிலையில் உள்ளது.
ஒகேனக்கல்லில்…
தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லுக்கு தொடர்ந்து விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை எதிரொலியாக தொடர்ந்து காவிரியில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. எனவே ஒகேனக்கல்லில் ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு நீடித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண் டிருந்தது. 8-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.