இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு: மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல்

இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு: மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல்

Insurance Policy

நமது நாட்டில் 1999-ம் ஆண்டு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணைய சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் துறையில் தனியார் துறை நுழைந்தது.

இந்தச் சட்டம் இன்சூரன்ஸ் துறையில் 26 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கும் அனுமதி அளிக்கிறது. ஆனால் இன்சூரன்ஸ் துறையை விரிவுபடுத்துவதற்கு இந்த 26 சதவீத வரம்பினை உயர்த்த வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தன.

இதையடுத்து இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீடு வரம்பினை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு எடுத்து, மசோதா உருவாக்கியது. இந்த மசோதா 2008-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. பாரதீய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதாவை டெல்லி மேல்-சபையில் எடுத்துக்கொள்ள முடியாமல் போனது.

சமீபத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, “இன்சூரன்ஸ் துறை முதலீடு இன்றி தவிக்கிறது. எனவே அன்னிய நேரடி முதலீட்டினை 49 சதவீதமாக உயர்த்துவதற்கு தேவை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் நிர்வாகம், கட்டுப்பாட்டில், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் வழியாக இது செயல்படுத்தப்படும்” என அறிவித்தார்.

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பினை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் சட்ட (திருத்தம்) மசோதாவில் திருத்தங்கள் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனி பாராளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து உலக பிரசித்தி பெற்ற கே.பி.எம்.ஜி. (இந்தியா) தொழில்முறை சேவை நிறுவனத்தின் பங்குதாரர் சஷ்வத் சர்மா கருத்து தெரிவிக்கையில், “ஆயுள், சுகாதாரம், பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை அன்னிய நேரடி முதலீடு வருவதற்கு வாய்ப்பு உள்ளது” என கூறினார்.